சிவனருள் பெற்ற அடியார்கள் – 20

By கே.சுந்தரராமன்

திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட மன்னர் மரபில் அவதரித்தவர் நரசிங்க முனையரைய நாயனார். அரசராக இருந்து, சிவாலயங்கள்தோறும் பல நிபந்தங்கள் அமைத்து, நித்திய வழிபாடுகள் தவறாமல் நடைபெறுமாறு செய்தவர் இவர்.

சோழ நாட்டுக்கும் தொண்டை நாட்டுக்கும் இடையே உள்ள நாட்டுக்கு நடு நாடு என்று பெயர். அந்நாட்டின் ஒரு பகுதியாக விளங்குவது திருமுனைப்பாடி நாடு. அரசராக இருந்து, திருமுனைப்பாடி நாட்டு மக்கள், மகிழும்படி சிறப்பாக ஆட்சி புரிந்துவந்த நரசிங்க முனையரையர், பல நாட்டு மன்னர்களை வென்று வீரமும் வெற்றியும் இனிது விளங்க வாழ்ந்தார்.

எந்நேரமும் சிவபெருமானை வழிபட்டு வந்தார். திருநீற்றில் சிறந்த அன்பு கொண்டிருந்தார். சிவபெருமானுடைய கோயில்களில் நித்திய நைமித்திக பூஜைகள் சிறப்பாக ஏற்பாடு செய்ததோடு மட்டுமல்லாமல், திருவிழாக்களையும் ஊர் மெச்சும் அளவுக்கு நடத்தினார்.

நரசிங்க முனையரைய நாயனார்

ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திர தினத்திலும், சிவமூர்த்தியை மிகவும் சிறப்பாக வழிபாடு செய்து மகிழ்வார். அன்றைய தினத்தில் அடியார் பெருமக்களுக்கு நூறு பொன் கொடுத்து வணங்குவார். திருநீற்றையும், திருநீறணியும் அடியார்களையும் பேணி, இனிது உபசரித்து, உணவளித்து, அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து இன்புறுவார்.

ஒரு திருவாதிரை நாளில் வழக்கம்போல் அடியார்கள் வரத் தொடங்கினர். அனைவருக்கும் உணவளித்து, பொன்னும் பொருளும் அளிக்கும் சமயத்தில், அடியார்களில் சிலர் மற்றொரு அடியாரை ஏளனம் செய்து கொண்டிருந்தனர். அந்த அடியார் உடல்நலம் குன்றி காணப்பட்டார். அவரைக் கண்டு மற்ற அடியார்கள் ஒதுங்கிக் கொண்டனர்.

இதை கவனித்த நரசிங்க முனையரையர் அடியார்களை நோக்கி, “நீங்கள் இவ்வாறு ஒருவரை இகழ்வது முறையன்று. யாராக இருந்தாலும் திருநீறு பூசியவர்களை இகழ்ந்தால், நரகத்தையே அடைவர். எனவே அனைவரும் திருநீறு அணிந்தவர்களை பூசிக்க வேண்டும்” என்றார்.

மேலும் அவர்களிடம், “திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் என்பதை யாவரும் அறிந்திருப்பீர்கள். திருநீறு சிவபெருமானுடைய திருவருளைப் பெறுவதற்கு மிகச் சிறந்த சாதனமாகும். திருநீற்றை அன்புடன் ஐந்தெழுத்தோதி அணிய வேண்டும். அவ்வாறு திருநீற்றை அணிபவர்களின் வினைகள் நீறுபடுவதால் இதற்கு நீறு என்று பெயர் வந்தது. மேலான செல்வமாக விளங்குவதால் விபூதி என்று அழைக்கப்படுகிறது.

பசுவின் சாணம் வெந்து சாம்பலானது திருநீறு. பசுக்களாகிய ஆன்மாக்களின் குறைகளைச் சுட்டு நீறாக்கச் செய்யும் என்பதே இதன் உட்குறிப்பாகும். கவசம் போல் உடலையும் உயிரையும் காப்பாற்றுவது திருநீறு. அதனால் ரட்சை என்ற பெயரும் இதற்கு உண்டு. ஈயம் பூசிய பாத்திரங்களில் நவசாரம் முதலிய நச்சுப் பொருட்களை மாற்ற பசுவின் சாணத்தை கரைத்து வைப்பதையும், நேர்வாள மரத்தின் நச்சுத்தன்மையை மாற்ற பசுவின் சாணத்தில் ஊற வைப்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

பசுவின் சாணத்தால் ஆகிய சாம்பலைத் தெளித்து, அவரைச் செடியை அழிக்கும் பூச்சிகளை அகற்றுவதை நாம் காண்கிறோம். பசுவின் சாணத்தால் ஆகிய திருநீறு நம் உடலில் உள்ள நச்சுக் கிருமிகளை அழித்து உடலுக்கும் உயிருக்கும் உறுதி பயக்கும். அப்படிப்பட்ட திருநீற்றை யார் பூசி வந்தாலும், அவர்களை நாம் இன்முகத்துடன் உபசரிக்க வேண்டும். அவர்களிடம் பகைமை பாராட்டக் கூடாது” என்று திருநீற்றின் பெருமையை நரசிங்க முனையரையர் கூறினார்.

அத்துடன், உடல் நலம் குன்றியிருந்த அடியாருக்கு இருநூறு பொன் கொடுத்தனுப்பினார் நரசிங்க முனையரையர். இவ்வாறு அடியார்களைப் பேணி, அவர்கள் வேண்டுவதை அளித்து, சிவாலயங்களுக்கு நிதியளித்து, நித்திய வழிபாடுகள் நடைபெறச் செய்து, திருநீற்றின் பெருமையை உலகறியச் செய்தார் நரசிங்க முனையரையர்.

சடையனார் மற்றும் இசைஞானியாரிடம் இருந்து சுந்தரரை அழைத்து வந்து தன் மகனாக பாவித்து வளர்த்து வந்தார் நரசிங்க முனையரையர். பல ஆண்டுகாலம் சிவத்தொண்டு புரிந்து, நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து சிவபெருமான் திருவடிகளைச் சேர்ந்தார்.

‘மெய்யடியான் நரசிங்க முனையரையர்க்கு அடியேன்’

**

6.நேச நாயனார்

துங்கபத்திரை நதிக்கரையில் உள்ள காம்பீலியில் சாலியர் (நெசவாளர்) குலத்தில் அவதரித்தவர் நேச நாயனார். எப்போதும் சிவனடியார்களைப் பணிந்து போற்றும் பண்புடையவர். அவர்களுக்கு தேவையான ஆடைகளை நெய்து, கொடுத்து மகிழ்வார்.

பல்லாரி மாவட்டத்தில் காம்பீலி தாலுக்காவில் உள்ள காம்பீலி நகரத்தில் அவதரித்த நேச நாயனார், சோழ நாடு மாயவரம் அருகே உள்ள கூறைபதியை பூர்விகமாகக் கொண்டவர் என்று கூறப்படுகிறது. காம்பீலியில் இருந்து விநாயகர் தண்டபாணி என்ற மூர்த்தியை (விக்கிரகம்) கொணர்ந்து, மாயவரம் அருகே உள்ள கூறைபதியில் ஸ்தாபித்தார் என்றும் கூறப்படுகிறது.

நேச நாயனார்

கோவணமும் கிழிந்த ஆடையும், சிவனடியார்களுக்கு மிகவும் பயனுடையதாக விளங்குபவை ஆகும். அவற்றை அடியார்களுக்கு இடையறாது தந்து உதவும் பணி மிகவும் சிறந்த பணியாக போற்றப்படுகிறது.

நேச நாயனார், சிவபெருமானுடைய திருத்தொண்டர்களுக்கு உரியனவாக ஆடையும் கீளும் கோவணமும் நெய்து, அன்புடன் அளித்து மகிழ்வார். எந்நேரமும் ஐந்தெழுத்தை ஓதி, சிவ வழிபாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார்.

சிவாலயங்கள்தோறும் சென்று சிவபெருமானை வணங்கி மகிழ்வார். ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்பதற்கு ஏற்ப, தனது நெசவுத் தொழில் மூலம் கிடைத்த செல்வத்தின் பெரும்பகுதியை திருத்தொண்டுகளுக்காகவே செலவிட்ட நேச நாயனார், நீண்ட நாட்கள் சிறப்புற வாழ்ந்து, சிவபெருமானின் திருவடி நிழலில் இளைப்பாறினார்.

‘நேசனுக்கும் அடியேன்’

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க...

சிவனருள் பெற்ற அடியார்கள் – 19

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE