கரூர்: கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவின் கூட்டத்தை கருத்தில் கொண்டு, முன்னதாகவே பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர். பக்தர்களுக்கு நீராடுவதற்கு வசதிக்காக அமராவதி ஆற்றில் நீருற்று, குழாய் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அமராவதி ஆற்றில் வாண வேடிக்கை நடைபெறும் இடம் பொக்லைன் மூலம் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா கடந்த 12 ஆம் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. வரும் ஜூன் 9 ஆம் தேதி வரை 29 நாட்கள் விழா நடைபெறுகிறது. கடந்த 17 ஆம் தேதி கரூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து 48 அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பூத்தட்டுகள் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சார்த்தப்பட்டன. கடந்த 19 ஆம் தேதி காப்புக் கட்டுதல் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் வரும் 29 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த பெண்கள், சிறுவர், சிறுமியர் நாள்தோறும் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி வழிப்பாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் நாளை முதல் கோயிலில் கூட்டம் அதிகம் காணப்படும் என்பதால் முன்னதாக இன்றே (மே 25 ஆம் தேதி) பலர் முடி இறக்கியும், கரும்புத் தொட்டிலில் குழந்தைகளை இட்டும் நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.
நாளை முதல் 29 ஆம் தேதி வரை மாவிளக்கு, பால்குடம் எடுத்தல், 27, 28 ஆம் தேதிகளில் அக்னி சட்டி, அலகு, காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மறுநாள் (மே 27 ஆம் தேதி) காலை 7.05 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
» திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூரில் கனமழை : கோயில்கள், குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்
பக்தர்கள் வருகையையொட்டி அமராவதி ஆற்றில் பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக குழாய் மற்றும் நீருற்று (ஷவர்), தற்காலிக கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மழை காரணமாக அமராவதி ஆற்றின் தென்பகுதியில் தண்ணீர் ஓடுகிறது. ஆற்றின் வலதுப்பகுதியில் குழந்தைகள் பொழுதுபோக்கும் வகையில் ஏராளமான ராட்டின விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மே 29 ஆம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்பட்ட பிறகு அமராவதி ஆற்றில் வாண வேடிக்கை நடைபெறுவது வழக்கம். அதனையொட்டி அமராவதி ஆற்றுப்பகுதியில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டு பொக்லைன் மூலம் அந்த இடத்தை சமப்படுத்தும் பணிகள் இன்று (மே 25ம் தேதி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாள்தோறும் இரவு 7 மணிக்கு மே 30 புஷ்ப விமானம், 31 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை கருட, மயில், கிளி, வேப்ப மர, பின்ன மர வாகனங்களில் அம்மன் புறப்பாடு, இரவு 7 மணிக்கு ஜூன் 5 புஷ்ப அலங்காரம், 6 இல் பஞ்ச பிரகாரம், 7 இல் புஷ்ப பல்லக்கு, ஸ்ரீமாரியம்மன் பல்லக்கு, ஸ்ரீமாவடி ராமசாமி பல்லக்கு, 8 இல் வெள்ளி ஊஞ்சல், 9 இல் சம்புரோசனை அம்மன் குடிபுகுதலுடன் விழா நிறைவுபெறுகிறது.