கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பக்தர்கள் நீராடும் பகுதியில் சீரமைப்பு பணி

By எல்.மோகன்

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் பகுதி முக்கடல் சங்கமம் என அழைக்கப்படுகிறது. வேறு எந்த கடல் பகுதிக்கும் இல்லாத சிறப்பு இங்கு உள்ளதால் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஆன்மிக வாதிகள், சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து புனித நீராடிச் செல்கின்றனர்.

மேலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய விசேஷ நாட்களில் ஏராளமானவர்கள் கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். முக்கடல் சங்கமத்தில் உள்ள படித்துறை உடைந்து கடலுக்குள் விழுந்து கிடக்கிறது. இதனால் கடலில் புனித நீராடும் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் கடலில் இடிந்து விழுந்து கிடக்கும் கற்களில் அடிபட்டு ரத்த காயங்களுடன் எழுந்து செல்லும் அவல நிலை இருந்து வருகிறது.

இதனால், கடலில் இடிந்து விழுந்து கிடக்கும் கற்களை அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையில் கன்னியாகுமரியில் சமீபத்தில் ஆய்வு நடத்திய கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, முக்கடல் சங்கமம் படித்துறையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பக்தர்களின் நன்கொடை மூலம் சீரமைக்கும் பணி கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

பெரிய கிரேன் மூலம் கடலில் இடிந்து விழுந்து மூழ்கி கிடந்த பாறாங்கற்களை வெளியேற்றி அகற்றினார்கள். இந்நிலையில் முக்கடல் சங்கத்தில் பக்தர்கள் நீராடும் படித்துறையில் உடைந்து கிடந்த படித்துறைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு புதிதாக கட்டி சீரமைக்கும் பணி இன்று காலை தொடங்கியது. இப்பணியை குமரி மாவட்ட திருக்கோயில்களின் அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE