9 எலுமிச்சம் பழம் ரூ.2,36,100... முருகன் கோயிலில் ஏலம் எடுத்த பக்தர்கள்!

By எஸ்.நீலவண்ணன்

திருவெண்ணெய்நல்லூர் அருகே முருகன் கோயில் திருவிழாவையொட்டி நடந்த ஏலத்தில் முருகனின் வேலில் செருகியிருந்த 9 எலுமிச்சம் பழங்கள் ரூ.2, 36,100-க்கு பக்தர்களால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

ஏலம் விடும் பூசாரி

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒட்டனந்தல் கிராமத்தில் மலைக் குன்றின் மீது மிகவும் பழமை வாய்ந்த ரத்தினவேல் முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு, மூலவர் சந்நிதியில் முருகன் சிலைக்குப் பதிலாக 5 அடி உயர வேல் மட்டுமே இருக்கும். இதற்குத்தான் வழிபாடுகள் நடத்தப்படும்.

இக்கோயிலில் இந்த ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23-ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் ரத்தினவேல் முருகன் கோயிலில் இருக்கும் 5 அடி உயர வேலில் ஒவ்வொரு எலுமிச்சம் பழம் சொருகி வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்தது.

எலுமிச்சம் பழம் செருகப்படும் வேல்

அப்படி 9 நாள் திருவிழாவிலும் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட 9 எலுமிச்சம் பழங்களையும் ஏலம் விடும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. முருகனின் வேலில் செருகி வழிபாடு நடத்தப்பட்ட எலுமிச்சம் பழத்தை குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் பிழிந்து சாப்பிட்டால் விரைவிலேயே குழந்தைப் பேறு கிடைக்கும், திருமணம் ஆகாதவர்கள் சாப்பிட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்று ஐதீகம் உண்டு.

எனவே ரத்தினவேல் முருகனின் எலுமிச்சம் பழங்களை ஏலம் எடுக்க சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்திருந்த முருக பக்தர்கள் இந்த ஏலத்தில் கலந்துகொண்டனர்.

இன்று காலையில் கோயில் பூஜைகளுக்கு பிறகு கோயில் பூசாரி புருஷோத்தமன் ஆணிபதித்த காலணியின் மீது ஏறி நின்றபடி முதலில் எலுமிச்சம் பழங்களை ஏலம் விட்டார்.

இதில் முதல் நாள் திருவிழாவில் வைத்து பூஜை செய்யப்பட்ட எலுமிச்சம் பழத்தை 50,500 ரூபாய்க்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் ஏலத்தில் எடுத்தனர். மற்ற எட்டு நாட்களிலும் பூஜிக்கப்பட்ட பழங்கள் ஏலம் விடப்பட்டது. அவை ஒவ்வொன்றும் 15,000 தொடங்கி 42,100 ரூபாய் வரையில் ஏலம் போனது. மொத்தம் 9 எலுமிச்சை பழங்களும் ரூ.2, 36,100-க்கு ஏலம் போனது.

இதையும் வாசிக்கலாமே...


தூத்துக்குடியில் கதறியழுத மூதாட்டி... கண்ணீரைத் துடைக்க முதல்வர் ஸ்டாலின் செய்த காரியம்!

எங்க தொகுதிக்கு என்னதான் ஆச்சு?... கலங்கும் மயிலாடுதுறை காங்கிரஸ்!

அனல் பறக்கும் தூத்துக்குடி... இன்று ஒரே நாளில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

தேச தந்தையை பாதுகாக்க நன்கொடை தந்தை என்ன செய்வார்? பாஜக மீது காங்கிரஸ் தாக்கு

அநியாயம் பண்ணாதீங்க...விஜய் ரசிகர்களிடம் கதறிய இயக்குநர் வெங்கட்பிரபு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE