காக்கும் கார்த்திகைச் செல்வன் - 41

By கே.சுந்தரராமன்

தென்காசி மாவட்டம், சிவகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமான் கோயில் கொண்ட தலங்களில் பல சிறப்புகளைக் கொண்ட தலமாகப் போற்றப்படுகிறது. அகத்திய முனிவருக்கு முருகப்பெருமான் காட்சி அருளிய தலமாக விளங்குவதால், இத்தலத்தில் உள்ள பாத மண்டபத்தில் முருகப்பெருமானின் பாதமும், அருகே சிவலிங்கமும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

உற்சவமூர்த்தியாக போற்றப்படும் முத்துக்குமார சுவாமி, பக்தர்கள் வேண்டும் வரங்களை அருள்பவராக உள்ளார். முடக்குவாதத்தால் அவதிப்படுபவர்கள் சோமாஸ்கந்த தலமாகப் போற்றப்படும் இங்கு வந்து, வணங்கினால், நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தல வரலாறு

ஒருசமயம் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, அகத்திய முனிவர் இத்தலத்தில் உள்ள குன்றின் மீது அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார். திருச்செந்தூரில் சூரபத்மன் வதம் நிறைவடைந்ததும், தெய்வயானையை மணந்து கொள்வதற்காக திருப்பரங்குன்றம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முருகப் பெருமான், இத்தலத்தைக் கடந்தபோது அகத்திய முனிவரைக் காண்கிறார். அகத்திய முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க அவருக்கு முருகப் பெருமான் சிறு பாலகனாக காட்சி அருள்கிறார். தாம் பெற்ற இன்பத்தை இவ்வையகம் பெற வேண்டும் என்று விரும்பிய அகத்திய முனிவர், இத்தலத்தில் கோயில் கொண்டு, பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று முருகப் பெருமானை வேண்டினார்.

அதன்படி முருகப்பெருமான் இத்தலத்திலேயே கோயில் கொண்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சூரபத்மனை போரிட்டு அழித்த முருகப்பெருமான், இத்தலத்தில் பாலகனாகக் காட்சி தருவதால், ‘பாலசுப்பிரமணியர்’ என்று அழைக்கப்படுகிறார்.

கோயில் அமைப்பும் சிறப்பும்

சுற்றிலும் தண்ணீர், மலைகள் சூழ அமைந்துள்ள இத்தலம் சோமாஸ்கந்த தலமாக போற்றப்படுகிறது. பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ள குன்று ‘சக்தி மலை’ என்று கூறப்படுகிறது. சக்தி மலைக்கு இடதுபுறத்தில் ‘சிவன் மலை’ உள்ளது. சிவபெருமானுக்கும் அம்பிகைக்கும் நடுவே ‘சோமாஸ்கந்தர்’ வடிவில் முருகப்பெருமான் இங்கு கோயில் கொண்டுள்ளார்.

முருகப்பெருமான் சந்நிதிக்கு வலதுபுறத்தில் சுந்தரேஸ்வரர் சந்நிதியும் இடதுபுறத்தில் மீனாட்சியம்மன் சந்நிதியும் உள்ளன. கோயில் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, சண்டிகேஸ்வரி, பைரவர், நவக்கிரகங்கள், சனீஸ்வரர், அஷ்டபுஜ துர்கை, இடும்பன் சந்நிதிகள் உள்ளன.

பொதுவாக அனைத்து கோயில்களிலும் கருவறையை சுற்றி அமைந்துள்ள சுவரில் லிங்கோத்பவர் இருப்பார். இத்தலத்தில் லிங்கோத்பவருக்கு தனி சந்நிதி அமைந்திருப்பது தனிச்சிறப்பு. அருகில் பிரம்மா, சண்டிகேஸ்வரர் எதிரெதிரே இருந்து அருள்பாலிக்கின்றனர். குன்றின் நடுவே காளியம்மன் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். காலை மற்றும் மாலை வேளைகளில் காளியம்மனுக்கே முதல் பூஜை செய்யப்படுகிறது. பௌர்ணமி தினத்தில் இரவு நேரத்தில் காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

உற்சவமூர்த்தியான முத்துக்குமார சுவாமி, வருடத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வீதியுலா செல்கிறார். பங்குனி பிரம்மோற்சவத்தின் 7-ம் நாள், கந்த சஷ்டி சமயத்தில் திருக்கல்யாணம் நடைபெறும் நாள், இவ்வுற்சவத்தின் 11-ம் நாள் ஆகிய 3 நாட்கள் மட்டுமே வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மற்ற நாட்களில் இவரை கோயிலுக்குள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.

இத்தல முருகப்பெருமான் நவக்கிரக முருகன் என்றும், தல விநாயகர் அனுக்ஞை விநாயகர் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஏகதள விமானத்தின் கீழ் உள்ள சந்நிதியில் அருள்பாலிக்கும் முருகப்பெருமான், தனது ஜடாமுடியை கிரீடம் போல் சுருட்டிவைத்து காட்சி அருள்கிறார். முருகப்பெருமானின் இக்கோலம் சிறப்பானதொரு கோலமாக போற்றப்படுகிறது. இவரது பாதத்தில் நவக்கிரகங்கள் உருவம் பொறித்த தகடு வைக்கப்பட்டுள்ளதால், கிரக தோஷம் நீக்குபவராக முருகப்பெருமான் போற்றப்படுகிறார்.

கிரக தோஷம் உள்ளவர்கள், அந்த கிரகத்தின் ஆதிக்கம் உள்ள நாளில் (ஞாயிறுக்கிழமை - சூரியன், ராகு, திங்கள்கிழமை - சந்திரன், செவ்வாய்க்கிழமை - செவ்வாய், கேது, புதன்கிழமை - புதன், கேது, வியாழக்கிழமை - குரு, வெள்ளிக்கிழமை - சுக்கிரன், சனிக்கிழமை - சனி பகவான்) முருகப் பெருமானை வழிபட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இத்தலத்து முருகப்பெருமானுக்கு திருச்செந்தூர் நடைமுறையில் பூஜைகள் செய்யப்படுகின்றன.

கந்த சஷ்டி கோலாகலம்

பொதுவாக அனைத்து கோயில்களிலும் கந்த சஷ்டி உற்சவம் 6 நாட்கள் நடைபெறும். திருக்கல்யாணத்துடன் சேர்த்து சில கோயில்களில் 7 நாள் உற்சவம் நடத்தப்படும். சிவகிரி தலத்தில் கந்த சஷ்டி உற்சவம் 11 நாள் விழாவாகக் கொண்டாடப்படுவது தனிச்சிறப்பு. ஆறாம் நாளில் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்கிறார்.

சூரசம்ஹார நிகழ்வுக்கு மறுநாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 11-ம் நாள் நடைபெறும் மகுடாபிஷேகத்துக்கு எண்ணற்ற பக்தர்கள் வருவது வழக்கம். அன்றைய தினத்தில் முருகப் பெருமானுக்கு தங்க கிரீடம் அணிவித்து கையில் செங்கோல் கொடுக்கப்படும். மகுடாபிஷேகம் நிறைவடைந்ததும் ராஜ அலங்காரத்தில் வீதியுலா காண்பார். அன்றைய தின வீதியுலா நிகழ்வுக்கு ‘பட்டினப்பிரவேசம்’ என்று பெயர். மகுடாபிஷேகம் நிகழ்வில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தால், தலைமைப் பதவி கிட்டும் என்பது ஐதீகம்.

ஞானப்பால் கொடுக்கும் வைபவம்

சமயக் குரவர்களுள் ஒருவரான திருஞானசம்பந்தர், முருகப்பெருமானின் அம்சமாகப் போற்றப்படுவதுண்டு. குழந்தையாக இருந்தபோதே, அம்பிகையிடம் ஞானப்பால் அருந்தி அவரது அருள் பெற்றதால், திருஞானசம்பந்தர், முருகப்பெருமானின் அம்சமாகவே கருதப்பட்டு, இளைய பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார்.

பங்குனி பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளில் திருஞானசம்பந்தருக்கு அம்பிகை ஞானப்பால் கொடுத்த வைபவம் நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் முருகப்பெருமானையே சம்பந்தராக பாவித்து அவருக்கு பால் அளிக்கப்படுகிறது. இந்த வைபவத்தைக் காண ஏராளமான பக்தர்கள் குவிவது உண்டு.

திருவிழாக்கள்

வைகாசி விசாகம், கந்த சஷ்டி, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய உற்சவங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

தைப்பூச தினத்தில் மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் உற்சவர் முத்துக்குமார சுவாமிக்கு பால், தயிர், நெய், பன்னீர், விபூதி, குங்குமம், மஞ்சள், சந்தனம், இளநீர், கரும்புச் சாறு, எலுமிச்சை சாறு, கும்பநீர் உட்பட 18 வகையான நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்படும். நிறைவில் விபூதி அலங்காரம் செய்யப்பட்டு, பட்டாடைகள், மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளில், முதல் கால பூஜையில் முருகப் பெருமான் சிவப்பு நிற வஸ்திரம் அணிந்து சிவபெருமான் அம்சமாக காட்சி அருள்கிறார். இரண்டாம் கால பூஜையில் வெண்ணிற வஸ்திரம் அணிந்து பிரம்மதேவர் அம்சமாகவும், மறுநாள் அதிகாலை மூன்றாம் கால பூஜையில் பச்சை வஸ்திரம் அணிந்து திருமால் அம்சமாகவும் முருகப்பெருமான் காட்சி அருள்கிறார். பங்குனி உத்திர தினத்தில் முருகப் பெருமான் தீர்த்த நீராடச் செல்லும்போது பக்தர்களும் அவருடன் சென்று தீர்த்த நீராடுவது வழக்கம்.

கிரக தோஷம் நீங்க, புத்திர தோஷம் விலக, நல்ல வேலை கிடைக்க, நல்ல இடத்தில் திருமணம் நடந்தேற, வழக்குகளில் வெற்றி பெற, தீராத நோய்கள் குணமாக இத்தலத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

இங்கு பக்தர்கள் ஒவ்வொரு குழுவாக அமர்ந்து முருகப் பெருமானை போற்றும் கந்த சஷ்டி கவசம், ஷண்முக கவசம், திருப்புகழ் பாடல்களைப் பாடுவது வழக்கம். சிவகிரி தலத்தைப் பற்றி முக்கூடற்பள்ளு இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமும் காலை 6-30 மணி முதல் 11-30 மணி வரையும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 வரையும் இக்கோயில் நடை திறந்திருக்கும்.

அமைவிடம்: திருநெல்வேலியில் இருந்து 100 கி.மீ தொலைவிலும், சங்கரன்கோவிலில் இருந்து 32 கி.மீ தொலைவிலும், ராஜபாளையத்தில் இருந்து 20 கி.மீ தொலைவிலும், புளியங்குடியில் இருந்து 18 கி.மீ தொலைவிலும் உள்ளது சிவகிரி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE