“மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூயப் பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோரெம்பாவாய்”
- திருப்பாவை-5.
விளக்கம்: “தனது கிருஷ்ண அவதாரத்தால் தன் தாயாருக்கு மேன்மையளித்த யமுனைத் துறைவனான மாயன் வடமதுரையில் பிறந்தான். தூய உள்ளத்தினராய் வந்து, அவனை தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனதினால் சிந்தித்தால், நாம் செய்திருக்கிற பிழையினால் நம்மைச் சார்ந்த பாவமும், நம்மிடம் புகவேண்டும் என்று காத்திருக்கும் பாவங்களும் தீயிலிட்ட தூசு போலாகிவிடும்” என்று ஸ்ரீஆண்டாள் நாச்சியாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் மதுரா.
உத்தரபிரதேச மாநிலத்தில் ராமஜென்ம பூமியான அயோத்தியைப் போலவே, கிருஷ்ண ஜென்மபூமியான மதுராவும் பெருஞ்சிறப்புற்று நம்மை பக்தியில் திளைக்க வைக்கிறது. கிருஷ்ண ஜென்ம பூமியாகிய மதுரா, கிருஷ்ணன் ஆடியும் பாடியும், ஆநிரை மேய்த்தும், கன்றுகள் பின்திரிந்தும் களித்திருந்த பிருந்தாவனம், ஆநிரைகளையும், கோபால கோபியரையும் காக்க குன்றைக் குடையாக எடுத்துப் பிடித்த கோவர்த்தன கிரி ஆகிய மூன்றையும் சேர்த்து ஒரே திவ்யதேசமாக கொள்வர். இந்த மூன்று இடங்களும் முக்கோண வடிவில் அமைந்துள்ளன. ஆழ்வார்கள் மதுரா, பிருந்தாவனம், கோவர்த்தனம் ஆகியவற்றை தனித்தனி பதிகங்களால் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
மதுராவில் ஸ்ரீகிருஷ்ணன் பிறந்த சிறைச்சாலை இருந்த இடத்தில், ஜென்மபூமி என்ற பெயரில் ஒரு புதிய கோவில் கட்டப்பட்டுள்ளது. இதுதான் மதுராவாகும். இத்தலம் பற்றிப் பேசாத வடநூல்களே இல்லையென்று சொல்லலாம். ஸ்ரீமத் பாகவதத்தில் முழுக்க முழுக்க மதுரா, கோவர்த்தனம், பிருந்தாவனம் ஆகிய மூன்றும் விவரிக்கப்பட்டுள்ளன.
மதுராவில் தென்னிந்திய கோயில்களைப் போல் அல்லாமல், மாளிகைகள் போல் கோயில்கள் அமைந்துள்ளன. மதுராவில் மூலவர் கோவர்த்தன நேசன் என்றும் பாலகிருஷ்ணன் என்றும் அழைக்கப்படுகிறார். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். தாயார் திருநாமம் சத்தியபாமா நாச்சியார்.
கோவர்த்தனத்திற்கு மயங்கி பெரியாழ்வார் 10 பாக்கள் பாடினார். அவரது திருமகளார் ஆண்டாள் பிருந்தாவனத்தில் கண்ணன் செய்த லீலைகளில் மயங்கி 10 பாடல்கள் படித்தார். இதுதவிர தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் என மொத்தம் 5 ஆழ்வார்களால் 50 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் மதுரா.
மதுரா செல்பவர்கள் மதுரா, பிருந்தாவனம், கோவர்த்தன கிரி, இங்கிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள கோகுலம் இவைகளை வரிசைப்படுத்தி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நாள் தங்கி கண்ணன் லீலைகளை மானசீகமாக உணர்ந்து, திவ்யமான பக்தி உணர்வில் திளைத்து ஸ்ரீகிருஷ்ண நினைவுடன் திரும்பி வரலாம்.
கோகுலாஷ்டமி சமயத்தில் இங்கே சென்றால் ஆடல் பாடல்களும் திவ்ய நாம பஜனைகளும் உபன்யாசங்களும், கிருஷ்ண நாடகங்களும் ஒரே விழாக் கோலமாகத்தான் இருக்கும்.
டெல்லியில் இருந்து ஆக்ரா செல்லும் ரயில் மார்க்கத்தில் மதுரா ஒரு சந்திப்பு ரயில் நிலையமாகும். இங்கிருந்து 12 கி.மீ. தூரத்தில் பிருந்தாவனம் உள்ளது. இதே தொலைவில் கோவர்த்தன கிரியும் அமைந்துள்ளது.