சிறுத்தை பயம் இனி இல்லை... திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி!

By காமதேனு

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் மீது வனவிலங்குகள் தாக்குதல் நடத்தினால் தற்காத்துக் கொள்வதற்காக கைத்தடி வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

கோயிலின் அறங்காவலர் குழுத்தலைவர் கருணாகர் ரெட்டி பக்தர்களுக்கு கைத்தடிகளை வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நடைபாதையில் பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் மீது வனவிலங்குகள் தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்காக மட்டுமே இந்த கைத்தடி வழங்கப்படுகிறது" என்று கூறினார்.

திருப்பதி கைத்தடி வழங்கும் திட்டம்

மேலும், "திருமலை திருப்பதி தேவஸ்தானம் வனவிலங்குகளிடமிருந்து பக்தர்களைப் பாதுகாக்காமல் கைத்தடி வழங்கினால் பிரச்சினை தீர்ந்து விடுமா என சிலர் குறை சொல்கிறார்கள். பழங்காலம் முதல் தற்போது வரை கிராமங்களில் இப்பொழுதும் வயல் வெளிகளுக்கு செல்பவர்கள் கையில் கைத்தடியை கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

எனவே, வனத்துறை அதிகாரிகள் வழங்கிய ஆலோசனையின் படியே நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு இந்த கைத்தடி வழங்கப்படுகிறது" என்றார்.

மேலும், " தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்களும், போலீஸாரும் நடைபாதை வழி முழுவதும் பக்தர்களுடன் துணை இருப்பார்கள். ஏற்கெனவே கூண்டு வைத்து நான்கு சிறுத்தைகள் பிடிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு சிறுத்தை இருப்பதாக வனத்துறை கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதனைப் பிடிப்பதற்கும் தொடர்ந்து கூண்டு வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது வன அதிகாரிகள், சைத்தன்யா, சதீஸ், சீனுவாசலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE