பகவான் மகாவிஷ்ணு பத்து அவதாரங்களை எடுத்திருக்கிறார். ஒவ்வொரு அவதாரமும் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவே எடுக்கப்பட்டன. தர்மம் என்பது நிலையான பலனைத் தரக்கூடிய சரணாகதி தர்மம்.
நிலையான பலன் என்றால், இம்மையிலும், மறுமையிலும் திவ்ய பேரானந்தத்தை தரக்கூடிய வாழ்வாகும். பகவான் நித்தியவாசம் செய்யும் பரமபத இன்பத்தை இங்கேயே அனுபவிக்கக் கூடிய வாழ்வாகும்.
இத்தகைய நிலையான பலனை அடைய ஒரே வழி பகவானை சரணடைவது மட்டுமே. இந்த சரணாகதி தர்மத்தை நிலைநாட்டத்தான் பகவான் அவதாரங்களை மேற்கொள்கிறார்.
அவர் மேற்கொண்ட அவதாரங்களில் ஸ்ரீவராகர், ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர் அவதாரங்கள் சிறப்பு வாய்ந்தவை.
அதிலும் ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தில், தேவகியின் கருவில் உதித்தது முதல் குழந்தையாய் மண்ணில் பிறப்பது வரை பல போராட்டங்களை சந்தித்து இருக்கிறார். இன்றைய உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் ஸ்ரீகிருஷ்ண பகவான் பிறக்கும் முன்பே அவரை அழிக்க காத்திருந்தார் அவரது தாய்மாமன் கம்சன். அதையும் மீறி ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய அஷ்டமி திதியில் அவரது அவதாரம் நிகழ்ந்தது. பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.
அன்று இரவோடு இரவாக மதுராவில் இருந்து குழந்தை ஸ்ரீகிருஷ்ணரை கோகுலத்துக்கு எடுத்துச் சென்று, அங்கு நந்தகோபன் மாளிகையில் அவரது மனைவி யசோதையிடம் கொண்டு சேர்த்தார் வசுதேவர். இதனை ஸ்ரீஆண்டாள் நாச்சியார் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார் பாருங்கள்:
“ஒருத்தி மகனாய் பிறந்து, ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தருக்கிலனாகி தான் தீங்கு நினைந்த
கருத்தப் பிழைப்பித்த கஞ்சன் வயிற்றில்
நெருப்பென நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்”
- திருப்பாவை.
விளக்கம்: சரணாகதியை ஆண்டாள் நாச்சியார் எளிதாக இப்பாடலில் விளக்குகிறார். தேவகியின் மகனாய் பிறந்து, ஒரே நாள் இரவில் யசோதையின் மகனாய் ஒளிந்து வளர்ந்தாய். அகங்காரத்தாலும், செருக்காலும் தனக்குத் தானே தீங்கிழைத்த கம்சனின் வயிற்றில் நெருப்பாக அச்சத்தை விளைவித்தாய். உன் புகழ்பாடுவதற்கே பயன்படக்கூடிய செல்வத்தையும், உனக்கு கைங்கர்யம் செய்யும் பேற்றையும் எங்களுக்கு அருளி, எங்கள் வருத்தம் தீர அருள்வாய்.
திதிகளில் அஷ்டமி, நவமி ஆகாத நாட்கள் என்பார்கள். ஆனால் பகவான் ஸ்ரீராமர் அவதரித்தது நவமி திதியில், ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்தது அஷ்டமி திதியில். எனவே இந்த இரண்டு திதிகளுமே வழிபாட்டுக்கு உரிய திதிகளாக மாற்றி விட்டார் ஸ்ரீமகாவிஷ்ணு.
பகவான் கிருஷ்ணரின் அவதார திருநாளை ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி, ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி என்று பலவிதமான பெயர்களில் நாடு முழுவதும் கொண்டாடுகிறோம். ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி என்பது மதுராவில் ஆவணி ரோகிணி நட்சத்திர நாளில் அஷ்டமி திதியன்று ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அவதரித்த நாள். கோகுலாஷ்டமி என்றால் அதேநாளில் இரவோடு இரவாக அவர் மதுராவில் இருந்து கோகுலத்துக்கு எடுத்து வரப்பட்டதை, அறியாமல் கோகுலவாசிகள் கொண்டாடிய நாள்.
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியன்று வீடுகள்தோறும் அரிசிமாவு கரைசலால் கண்ணனின் கால்தடத்தை வாசலில் இருந்து பூஜையறை வரை பதிப்பார்கள். ஸ்ரீகிருஷ்ணரின் விக்ரகம் அல்லது படத்தை அலங்கரித்து, பால், தயிர், வெண்ணெய், அவல், பழங்கள், வெண்ணெய் ஆகியவற்றை படைப்பார்கள். மேலும், வெல்லச்சீடை, உப்புச் சீடை, கை முறுக்கு, அவல் லட்டு, தேன்குழல், திரட்டுப்பால் என குழந்தைகளுக்கு விருப்பமான தின்பண்டங்களை ஸ்ரீகிருஷ்ண பகவானுக்கு படைத்து வணங்குவது வழக்கம்.
கிருஷ்ணர் அவதரித்த மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமியில் பக்தர்கள் விடிய விடிய கூடி வழிபாடுகள் செய்வார்கள். ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஆடல், பாடலுடன் உற்சாகமாக கொண்டாடப்படும் விழாவாகும்.
6.9.2023 - ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி.