இன்று காலை ஆழித் தேரோட்டம் ஆரவாரமாக தொடங்கியது... பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்!

By காமதேனு

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் இன்று காலை வெகு விமர்சையாக தொடங்கியது.

திருவாரூர் தேர்

திருவாரூரில் அமைந்துள்ள தியாகராஜர் கோயில் நாயன்மார்களால் பாடப்பட்ட சிறப்புக்குரியதாகவும், பஞ்சபூத தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இது சர்வ பரிகார தோஷங்களை நீக்கும் தலமாகவும் திகழ்கிறது. இந்தக் கோயிலில் திருவிழா மார்ச் மாதத்தில் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அப்போது நடத்தப்படும் தேரோட்டம் உலகப் புகழ் பெற்றதாகும். இங்குள்ள ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக கருதப்படுகிறது. இந்த தேரோட்டம் டெல்டா மாவட்டங்களில் புகழ்பெற்ற ஒன்றாக விளங்கும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவாரூர் தியாகராஜர் சன்னதியின் பங்குனி திருவிழா கடந்த பிப்ரவரி 27 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.

அஸ்தம் நட்சத்திரத்தில் குடியேறி ஆயில்யம் நட்சத்திரத்தில் தேர் திருவிழா நடத்தப்படவேண்டும் என்பது ஆகமவிதி. அதன்படி அஸ்தம் நட்சத்திரத்தில் கொடியேற்றம் இனிதே நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆயில்ய நட்சத்திர தினமான இன்று ஆசியாவிலே மிக பெரிய தேரான ஆழித் தேரோட்டம் துவங்கியது.

பக்தர்கள் கூட்டம்

இன்று காலை தேருக்கு உற்சவர் கொண்டுவரப்பட்ட பின் முதலில் விநாயகர் தேர் காலையில் புறப்பட்டு சென்றது. அதைத்தொடர்ந்து 8.50 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, எம்எல்ஏ பூண்டி கலைவாணன் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பெரிய தேரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தேரை இழுத்து வருகின்றனர். கீழ ரத வீதியில் தொடங்கியுள்ள தேரோட்டம் இன்று பகல் முழுவதும் நான்கு ரத வீதிகளிலும் வலம்வந்து, மாலையில் நிலைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருவாரூர் தியாகராஜ கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கும்பகோணம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, வேதாரண்யம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் திருவாரூருக்கு இயக்கப்படுகின்றன. திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE