புதுச்சேரி நேரு வீதியில் பழமையான திருப்பதி தேவஸ்தான திருக்கோயில் இருந்தது. திருப்பதி செல்ல இயலாத பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். புதுச்சேரி மட்டுமில்லாமல் தமிழக பக்தர்களும் இங்கு வருவதுண்டு. திருப்பதி லட்டு பிரசாதமும் இங்கு கிடைக்கும்.
திருப்பதி செல்ல விரும்பும் பக்தர்கள் கோயிலின் முதல் தளத்தில் தரிசன டிக்கெட்டுக்கு முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்தச் சூழலில், இக்கோயில் கட்டுமானத்தில் பழுது ஏற்பட்டதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதி நிறுத்தப்பட்டது. தரிசன டிக்கெட் முன்பதிவு கூடமும் மூடப்பட்டது.
ஒருகட்டத்தில் கோயில் முன்பக்க கூரை இடிந்தது. பின்னர் கோயில் மூடப்பட்டது. புதிய கோயில் கட்டுவதாக தெரிவிக்கப்பட்டு, அப்பகுதி அகற்றப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகியும் புதிதாக கோயில் கட்டப்படவில்லை. புதுச்சேரி நேரு வீதியில் 10 ஆண்டுகளுக்கு முன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்த திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட ஏழுமலையான் கோயில். (கோப்பு படம்)திருக்கோயில் பாதுகாப்பு கமிட்டியினர் தேவஸ்தானத்தில் இதுபற்றி புகார் அளித்தனர்.
இதையடுத்து புதுச்சேரி அரசு கடந்த 10.1.22-ல் புதிய கோயில் கட்ட அனுமதி அளித்தது. ஆனாலும் கட்டப்படவில்லை. திருப்பதி தேவஸ்தான தலைவர், நிர்வாக அதிகாரி, ஆந்திர முதல்வர் உள்ளிட்டோருக்கு புதுச்சேரியில் உள்ள பக்தர்கள் இதுதொடர்பாக தங்களது வேண்டுகோளை மனுக்களாக அனுப்பினர். இடிந்த கோயில் முன்பு சனிக்கிழமை தோறும் மாலையில் பஜனை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பாஜக எம்எல்ஏ அசோக்பாபு, கடந்தாண்டு ஜூன் மாதம் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். பின்னர் அவர், “விரைவில் திருப்பதி தேவஸ்தான திருக்கோயில் புதுச்சேரியில் கட்டப்பட உள்ளது” என்று தெரிவித்தார். அவர் அவ்வாறு தெரிவித்தே 15 மாதங்களாகி விட்டன. ஆனாலும் இன்னும் எந்தப் பணியும் நடக்கவே இல்லை.
புதுச்சேரியில் உள்ள ஏழுமலையான் பக்தர்கள் இதுபற்றி கூறுகையில், “திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் நேரு வீதியில் இருந்த இக்கோயிலில் பெருமாளை தரிசித்து வந்தோம். பழைய கோயில் அகற்றப்பட்டு 10 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் கோயில் கட்ட எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. திருப்பதி தேவஸ்தானமும் நடவடிக்கை எடுக்கவில்லை... எப்போதுதான் திருப்பதி தேவஸ்தான திருக்கோயில் கட்டப்படும்" என ஏக்கத்துடன் கேட்கின்றனர்.
புதுச்சேரியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அரசு மனது வைத்து, ஆந்திரத்தில் அமைந்துள்ள புதிய அரசை அணுகி, புதுச்சேரியில் கோயில் கட்டுவது குறித்து பேசலாம். அப்படி பேசினால் நிச்சயம் நடக்கும் என்றும் பக்தர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.