திரேதாயுகத்தில் ஒரு சமயம் அசுர இயல்புடைய துஷ்டர்கள் அரசர்களாகி கொடுங்கோலாட்சி புரிந்தனர். அப்பொழுது பூமாதேவி வருந்தி பிரம்மதேவரிடம் முறையிடச் சென்றாள்.
பூமாதேவியின் கண்ணீர்
பூமாதேவி பசுவின் வடிவு தாங்கி, கண்களில் நீர்வடிய மிக்க துன்பத்துடன் கதறிக்கொண்டு, பிரம்மதேவரிடம் பூமியில் நடக்கும் கொடுமைகளை எடுத்துரைத்தாள்.
பூமாதேவியின் துன்பத்தை அறிந்த பிரம்மதேவர், சிவன், இந்திரன் முதலிய தேவர்களையும் அழைத்துக்கொண்டு ஸ்ரீ மந் நாராயணன் பள்ளி கொண்டிருக்கும் திருப்பாற்கடலை அடைந்தார். அவர்கள் திருப்பாற்கடலின் கரையில் நின்று, எல்லா உலகங்களின் ஈசனும், அனைத்தையும் உள்ளிருந்து ஆட்டுவிக்கின்றவரும், எல்லாருக்கும் தெய்வமும், பரிபூரணருமாகிய ஸ்ரீ மந் நாராயணனை போற்றித் தியானித்தனர். தியான நிலையிலிருந்த பிரம்மதேவர் அசரீரியாக ஒலித்த ஒரு வாக்கைக்கேட்டுத் தேவர்களிடம் பின்வருமாறு கூறினார்.
"தேவர்களே! பரமாத்மாவான ஸ்ரீ மந் நாராயணனின் கட்டளையைக் கேளுங்கள். பின்னர் தாமதிக்காமல் அதன்படி விரைவில் நடந்து கொள்ளுங்கள். பூமியில் நடக்கும் கொடிய செயல்களை ஸ்ரீமந் நாராயணன் முன்னரே அறிந்திருக்கிறார். ஈஸ்வரர்களுக்கெல்லாம் ஈஸ்வரனான ஸ்ரீ மந் நாராயணன் பூமியில் அவதாரம் செய்யப் போகிறார். நீங்களும் யது மகராஜனின் பரம்பரைகளில் தோன்றி ஸ்ரீ கிருஷ்ண பகவானின் லீலைகளில் பங்கு கொள்ளுங்கள்.
பரம புருஷனான ஸ்ரீ மந் நாராயணன் தாமே நேரில் வசுதேவருக்கு மகனாகப் பிறக்கப் போகிறார். தேவமாதர்களும் பூமியில் பிறந்து அவருக்குப் பணிவிடைகள் செய்வீர்களாக.
ஸ்ரீ மந் நாராயணனை விட்டுப் பிரியாது எல்லா விதமான பணிகளையும் செய்யும் ஆதிசேடனும், ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு அண்ணனாகப் (ஸ்ரீ பலராமர்) பிறந்து ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு உகந்த காரியங்களைச் செய்யப் போகிறார்.
ஸ்ரீ மந் நாராயணனின் பணிகளைச் செய்யும் யோகமாயை என்பவள், பூமியில் பிறந்து, ஸ்ரீ கிருஷ்ண பகவானின் கட்டளைகளை நிறைவேற்றப் போகிறாள்.
இவ்வாறு தேவர்களுக்கு பிரம்மா கட்டளையிட்டு, பூமாதேவியை அன்பான வார்த்தைகளால் சமாதானம் செய்துவிட்டு, தம் இருப்பிடமான பிரம்மலோகத்தை அடைந்தார்.
யது வம்சம்
“எந்த வம்சத்தில் பரமாத்வாகிய ஸ்ரீகிருஷ்ண பகவான் அவதரித்தாரோ, அந்த யது வம்சத்தைப் பற்றிக் கேட்கும் மனிதன் எல்லாப் பாவங்களில் இருந்து விடுபடுகிறான்” - ஸ்ரீமத் பாகவதம் 9.23.19.
யது வம்சம் தோன்றிய வரிசையைப் பாருங்கள்:
ஸ்ரீமந் நாராயணனிடம் இருந்து பிரம்மா தோன்றினார். பிரம்மாவின் மானச புத்திரர் அத்ரி. அத்ரியின் மகன் சந்திரன். சந்திரனில் இருந்து புதன், புதனின் மகன் புரூரவஸ், இவரது மகன் ஆயுஸ், ஆயுஸின் மகன் நகுசன், நகுசனின் மகனாக யயாதி பிறந்தார். யயாதியின் மகன் யது மகாராஜன். யதுவிடம் இருந்து தோன்றிய குலம் யது குலம். யது மகாராஜனின் கொடி வழியில் ஏழாவது தலைமுறையில் சினி, அனு என்ற இரு கொடி வழி பிரிகிறது. இதில் சினியின் வம்சத்தில் தேவமிடன், இவரது மகன் சூரசேனன் ஆகியோர் தோன்றினார்கள். அனுவின் வம்சத்தில் உக்ரசேனர் பிறந்தார். இவரது மகன்தான் கம்சன்.
யது வம்சத்தவர்களின் தலைவனான சூரசேனன் மதுராபுரியைத் தலைநகராகக் கொண்டு மதுராபுரியைச் சேர்ந்த தேசங்களை ஆட்சி செய்தார். ஸ்ரீ மந் நாராயணன் என்றைக்கும் தமக்கு உகந்த இடமாகக் கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிந்து வரும் மதுராபுரி, யது வம்சத்தவர்களின் தலைநகராக நிலைபெற்று விளங்கியது. பிற்காலத்தில் சூரசேனரிடம் இருந்து மதுராவை உக்ரசேனர் பறித்துக் கொண்டார்.
எனவே, சூரசேனர் மதுவனத்துக்கு இடம்பெயர்ந்தார். இவரது மகன் வசுதேவர். வசுதேவருக்கு ரோகிணியின் மூலமாக பலராமரும், சுபத்ரையும் பிறந்தார்கள். வசுதேவரின் மற்றொரு மனைவியான தேவகிக்கு எட்டாவது குழந்தையாக ஸ்ரீகிருஷ்ண பகவான் அவதரித்தார்.
வசுதேவரின் சகோதரர் தேவபாகருக்கு மகனாக உத்தவர் பிறக்கிறார். இவர் ஸ்ரீகிருஷ்ண பகவானின் சித்தப்பா மகன். ஸ்ரீமத் பக்வத்கீதையை உத்தவருக்கு தனியாக ஸ்ரீகிருஷ்ணர் உபதேசித்தார். அது உத்தவகீதை எனப்படுகிறது.
அதுபோல் வசுதேவருக்கு ஐந்து சகோதரிகள். இவர்களில் குந்திமாதேவிக்கு 3 பாண்டவர்கள் பிறந்தார்கள். சிருததேவையின் மகனாக நந்தவக்ரதன், சிருதச்ரவஸின் மகனாக சிசுபாலன் ஆகியோர் பிறந்தார்கள். நந்தவக்ரதனும், சிசுபாலனும் தனது மாமன் மகனான ஸ்ரீகிருஷ்ணரை விரோதியாக எண்ணினார்கள். இவர்களை ஸ்ரீகிருஷ்ணர் வதம் செய்தார்.
வசுதேவரின் 4-வது சகோதரி சிருதகீர்த்தியின் மகள் பத்ராவையும், 5-வது சகோதரி ராஜாதிதேவியின் மகள் மித்ரவிந்தையையும், ஸ்ரீகிருஷ்ணர் மணம்புரிந்தார்.
வசுதேவரின் திருமணம்
மதுராபுரியில் ஒரு சமயம் சூரசேனரின் புதல்வரான வசுதேவர், தேவகராஜன் மகளான தேவகியை மணந்து கொண்டார். அவளுடன் தேரிலேறித் தம்மிடத்திற்குப் புறப்பட்டார். உக்ரசேனனின் மகனான கம்சன் தனது சகோதரியான தேவகியின்பால் வைத்த அன்பின் மிகுதியால் மணமக்கள் செல்லும் பொன்மயமான தேரிலேறி, குதிரைகளின் கடிவாளத்தைக் கையில் பிடித்து ஓட்டத் தொடங்கினான்.
தேவகராஜன் தன் மகள் மீது கொண்ட பாசத்தால் 400 யானைகளையும், 10,000 குதிரைகளையும், 1,800 தேர்களையும், 200 பணிப்பெண்களையும் மணமக்களுக்குப் பரிசாக வழங்கினார். மணமக்கள் புறப்பட்டபோது சங்கு, மிருதங்கம், பேரிகை முதலிய மங்கல வாத்தியங்கள் முழங்கின.
அசரிரீயால் ஆபத்து
கம்சன் தேரை ஓட்டிக்கொண்டு சென்றான். அப்பொழுது ஆகாயத்தில் ஓர் அசரீரி ஒலித்தது. “அடே கம்சா! அறிவு கெட்டவனே! நீ யார் மீது கொண்ட பாசத்தால் தேரை ஓட்டுகிறாயோ, அவளுடைய எட்டாவது குழந்தை உன்னைக் கொல்லப்போகிறது" என உரைத்தது.
இதைக் கேட்டதும் துஷ்டனும், பாவியும், போஜ குலத்திற்குக் களங்கம் போன்றவனுமாகிய கம்சன், வாளை எடுத்துத் தேவகியின் கூந்தலைப் பிடித்து இழுத்து, அவளைக் கொல்லுவதற்குத் துணிந்தான்.
உடனே வசுதேவர், கம்சனுடைய மனம் அமைதி அடையுமாறு பின்வரும் நல்லுரைகளைக் கூறினார். “கம்ச மகாராஜனே! நீர் போஜகுலத்தின் புகழை வளர்ப்பவர், உம்முடைய வீரச்செயல்களை வீரர்கள் எப்பொழுதும் போற்றுகின்றனர். அப்படியிருக்க நீர் ஒரு பெண்ணை, அதுவும் உம்முடைய சகோதரியைத் திருமணம் முடிந்த அன்றே கொல்லுவதற்கு எப்படி உமக்கு மனம் வந்தது?
தேவகியோ உமது சகோதரி, அறியாப்பெண், உமது மகளுக்கு ஒப்பானவள். கருணையுடையவரே! மங்களம் பொருந்திய உமது சகோதரியைக் கொலை செய்யத் துணிவது உமது பெருந்தன்மைக்குத் தகுதி அல்ல” என்று நல்ல வார்த்தைகளை, இரக்கத்தோடு வசுதேவர் கூறினார்.
கம்சன் யது குலத்தில் பிறந்தவன்தான் என்றாலும் கொடுமையானவன். அசுர வழியைப் பின்பற்றி நடப்பவன். ஆதலால், வசுதேவர் கூறிய நல்லுரைகளைக் கேட்டும் அவன் மனம் அமைதி அடையவில்லை. பாவச் செயல்களினால் இப்பிறவியிலும், மறுபிறவியிலும் நேரக்கூடிய விளைவுகளைப் பற்றிக் கம்சன் கவலைப்படவில்லை.
தேவகியை, கம்சனிடமிருந்து உடனடியாகக் காப்பாற்ற வேண்டி வசுதேவர் பின்வருமாறு சிந்தித்தார். தேவகிக்கு குழந்தை பிறப்பதற்கு முன் கம்சன் இறந்தாலும் இறக்கலாம். அல்லது அசரீரியின் கூற்றுப்படி தேவகியின் குழந்தையால் கம்சன் கொல்லப்படலாம். எனவே, தேவகிக்குப் பிறக்கும் குழந்தைகளைக் கம்சனிடம் ஒப்படைப்பதாகக்கூறி தேவகியை முதலில் காப்பாற்றுவோம் என்று சிந்தித்தார்.
வசுதேவரின் யோசனை
வசுதேவர் தன் மனைவிக்கு நேர்ந்த ஆபத்தான சூழ்நிலைக்கு வருந்தியவராய், வெளியே சிரித்துக் கொண்டு, கொடுமையானவனும், வெட்கம் கெட்டவனுமான கம்சனிடம் பின்வருமாறு கூறினார்.
“சிறந்த குணங்கள் நிறைந்தவரே! தேவகியிடமிருந்து உமக்கு மரணம் வரும் என்று அசரீரி கூறவில்லை. தேவகியின் மகனால்தான் உமக்கு மரணம் வரும் என்று அசரீரி கூறியுள்ளது. எனவே, தேவகிக்குப் பிறக்கும் குழந்தைகளை உம்மிடம் ஒப்படைத்து விடுகிறேன். இப்பொழுது இவளை விட்டுவிடும்” என்று கூறினார்.
வசுதேவர் கூறிய கருத்துக்களைக் கேட்ட கம்சன், தேவகியைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விட்டான். வசுதேவர் மகிழ்ந்து, கம்சனை புகழ்ந்து பாராட்டி விட்டுத் தன் மனைவியுடன் வீடுபோய்ச் சேர்ந்தார்.
சிலகாலம் காலம் சென்ற பிறகு தேவர்களாலும் போற்றப்படும் தன்மை பொருந்திய தேவகி குழந்தைக்கு தாய் ஆனாள். முதல் குழந்தை பிறந்ததும், வசுதேவர் உறுதி கூறியபடி தன் குழந்தையைக் கம்சனிடம் ஒப்படைத்தார்.
கம்சனின் மனமாற்றம்
ஸ்ரீமந் நாராயணனின் பக்தர்கள் ஸ்ரீமந் நாராயணனைத் தவிர வேறு எதையும் விரும்பாட்டார்கள். ஸ்ரீமத் நாராயணனிடம் மனதை நிலைநிறுத்தியவர்கள் ஸ்ரீமந் நாராயணனுக்காக எதையும் தியாகம் செய்வார்கள். ஸ்ரீமத் நாராயணனின் பக்தர்களுக்குப் பொறுக்க முடியாதது இவ்வுலகில் எதுவும் இல்லை. அதன்படி இன்பத்திலும், துன்பத்திலும் சமநிலையிலிருக்கும் வசுதேவரின் மனவுறுதியையும், நேர்மையையும் அறிந்து கம்சன் மகிழ்ச்சி அடைந்து பின்வருமாறு கூறினாள்.
“வசுதேவரே! இந்தக் குழந்தையை எடுத்துகொண்டு உமது வீட்டிற்குச் செல்லுங்கள். இந்தக் குழந்தையால் எனக்கு மரணம் இல்லை. உம்முடைய எட்டாவது குழந்தையால்தான் எனக்கு மரணம் ஏற்படும் என்று அசரிரீ கூறியது” என்றான்.
உடனே வசுதேவர் தன் குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றார். ஆனாலும் உறுதியற்ற மனமுடைய கம்சனது வார்த்தையை நம்பவில்லை. எந்த சமயத்தில் என்ன வருமோ? என அஞ்சினார்.
நாரதரின் தந்திரம்
அப்போது தேவ முனிவராகிய நாரதர் மதுராவுக்கு வந்தார். கம்சனிடம் சென்றார். “கம்சனே! முற்பிறவியில் காலநேமி என்ற அசுரனாக பிறந்திருந்தாய். அப்போது ஸ்ரீமந் நாராயணனால் நீ கொல்லப்பட்டாய். இந்தப் பிறவியில் கம்சனாகப் பிறந்துள்ளாய். முற்பிறவியைப் போலவே இப்போதும் கொடுஞ்செயல்களை செய்து கொண்டிருக்கிறாய். உன்னை அழிக்கவே ஸ்ரீமந் நாராயணன் ஸ்ரீகிருஷ்ண பகவானாக அவதாரம் செய்யப்போகிறார்.
கோகுலத்தில் உள்ள நந்தகோபர் முதலிய கோபாலர்களும், அங்குள்ள பெண்களும், வசுதேவர் முதலான விருஷ்ணிகளும், தேவகி, யசோதை முதலான பெண்களும், இவர்களின் நண்பர்களும், உறவினர்களும் ஆகிய அனைவரும் தேவர்களே ஆவார்கள். ஸ்ரீகிருஷ்ண பரமத்மாவைவரவேற்கவே இத்தனை ஏற்பாடுகளும் நடக்கின்றன” என்று நாரதர் கம்சனிடம் வந்து கூறிவிட்டுச் சென்றார்.
கம்சனின் அச்சம்
கம்சன் திகிலடைந்தான். யது வம்சத்தவர்கள் எல்லாம் தேவர்கள் என்றும், தேவகிக்குப் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் தன்னை கொல்லுவதற்காகப் பிறக்கும் ஸ்ரீகிருஷ்ண பகவான் என்றும் கருதினான். அதனால் வசுதேவரையும், தேவகியையும் சிறைப்படுத்தினான். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளைக் வரிசையாக கொன்றான். தேவர்களின் அம்சமான யது வம்சத்தவர்களை மிகவும் கொடுமையாகத் துன்புறுத்தினான். இதனைத் தடுத்த தன்னுடைய தந்தையான உக்ரசேனனை, கம்சன் சிறையில் அடைத்துவிட்டுத் தானே ஆட்சி செய்தான். கம்சனால் அவனது நாட்டில் உள்ளவர்கள் மிகவும் துன்புற்றார்கள். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அவதாரம் சீக்கிரம் நிகழ வேண்டுமே என்று அனைவரும் பிரார்த்தித்தார்கள்.