புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

By KU BUREAU

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இரவு முழுவதும் இவர்கள் கடற்கரையில் தங்கியிருந்து மறுநாள் சுவாமி தரிசனம் செய்வர்.

நேற்று புரட்டாசி மாத பவுர்ணமி தினம் என்பதால் திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர். தொடர் விடுமுறை காரணமாக கடந்த சில நாட்களாகவே திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் பவுர்ணமி மற்றும் விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிய தொடங்கினர். மாலையில் கூட்டம் பல மடங்கு அதிகரித்தது. இதனால் கோயில் கடற்கரை நிரம்பி வழிந்தது. இரவு முழுவதும் கடற்கரையிலேயே தங்கியிருந்து சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் ஈடுபட்டனர்.

நேற்று அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப் பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE