தஞ்சை மாவட்டத்தில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வரும் காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் காவிரிப் பொங்கல் விழாவின் 75 வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தஞ்சை மண் உள்ளிட்ட டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வினை வளப்படுத்தும் காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆண்டு தோறும் காவிரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இதன் 75 வது ஆண்டாகும். இதையொட்டி கும்பகோணம் காவிரிக்கரையில் உள்ள ராஜேந்திரன் படித்துறையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயில் நிர்வாக குழுவின் சார்பில் காவிரி பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சோழமண்டல செழுமைக்கும், தெய்வ பத்திக்கும் காரணமாக திகழும் அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு, மகா பூர்ணாஹதியும், மகா தீபாராதனையும் செய்யப்பட்டது.
இதையடுத்து மங்கள வாத்தியங்கள் முழங்க காவிரி நதிக்கு மஞ்சள், சந்தனம், பால் உள்ளிட்ட மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காவிரி அன்னைக்கு பஞ்சார்த்தி காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாநகராட்சி துணை மேயர் தமிழழகனும், ஏராளமான பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக பங்கேற்று காவிரி ஆற்றில் தீபத்தை மிதக்க விட்டனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற குத்துவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று உலக மக்களின் மேன்மைக்காக வழிபாடு செய்தனர்.