ஒரு லட்டின் விலை ரூ.1.87 கோடி - ஹைதராபாத் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் ஏலம்

By KU BUREAU

தெலங்கானா: விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு ஹைதராபாத்தின் பண்ட்லகுடாவில் உள்ள கீர்த்தி ரிச்மண்ட் வில்லாஸில் லட்டு ஏலம் விடப்பட்டது. இந்த லட்டு 1.87 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள பண்ட்லகுடாவின் கீர்த்தி ரிச்மண்ட் வில்லாஸில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி லட்டு ஏலம் நடைபெற்றது. செப்டம்பர் 16, திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஏலத்தில் இந்த லட்டு ரூ.1,87,36,500 கோடிக்கு விற்கப்பட்டது. இது முந்தைய ஆண்டை விட ரூ.61 லட்சம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு இந்த லட்டு ரூ.1.26 கோடிக்கு ஏலம் போனது. ஆனால் இதனை வாங்குபவரின் பெயர் விழா ஏற்பாட்டாளர்களால் வெளியிடப்படவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக, தெலங்கானா மாநிலத்தின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களில் கீர்த்தி ரிச்மண்ட் வில்லாஸ் லட்டு மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது. இந்த லட்டு 2022ம் வருடத்தில் ரூ.60 லட்சத்துக்கு ஏலம் போனது.

இந்நிகழ்ச்சியில் மொத்தம் 100 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தலா 25 உறுப்பினர்கள் கொண்ட நான்கு அணிகளாக இவை பிரிக்கப்பட்டு, ஒரு அணி ஏலத்தில் வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு ஏலத்தின் மூலம் கிடைத்த வருமானம் எப்படி ஆதரவற்றவர்களுக்கு நன்கொடையாக பயன்படுத்தப்பட்டதோ, அதேபோன்று இந்த தொகையும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல 1994-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கணபதி கொண்டாட்டத்தின் கடைசி நாளில் ஏலம் விடப்படும் பாலாபூர் கணேஷ் லட்டுவை இந்த ஆண்டு ரூ.30.1 லட்சத்துக்கு பாஜக தலைவர் கோலன் சங்கர் ரெட்டி நேற்று காலை வாங்கினார். இந்த லட்டு கடந்த ஆண்டு ரூ.27 லட்சத்துக்கு ஏலம் போனது. முதன் முதலாக பாலாபூர் கணேஷ் லட்டுவை ஏலம் விடுவதற்கான பாரம்பரியம் 1994 ல் தொடங்கியது, அப்போது உள்ளூர் விவசாயி கோலன் மோகன் ரெட்டி அதை ரூ.450 க்கு வாங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE