ஏழிசையால் பக்தனைக் காக்க மதுரையில் விறகு விற்ற ஈசன்

By மு.இசக்கியப்பன்

மதுரையில் வரகுண பாண்டியன் ஆட்சிக்காலத்தில், பாணபத்திரர் என்ற சிவபக்தர் வாழ்ந்துவந்தார். சொக்கநாதர் சன்னதியில் இசைபாடி இறைவனையும், இறைவியையும் மகிழ்விப்பது அவரது வழக்கம். தனது பக்தனின் பெருமையை உலகுக்கு அறிவிப்பதுதானே ஈசனின் விருப்பமாக இருக்கும்? அதனை நிறைவேற்ற சொக்கநாதப் பெருமான் நடத்திய லீலையே விறகு விற்ற படலம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

பல்வேறு நாடுகளிலும் தனது யாழிசைத் திறமையால், கலைஞர்களை வென்றவன் ஏகநாதன். திரண்ட செல்வத்துக்கும், ஏராளமான விருதுகளுக்கும் சொந்தக்காரன். எவ்வளவு திறமைகள் இருக்கிறதோ அந்த அளவுக்கு கர்வமும் அவனிடம் இருந்தது.

வந்தான் ஏகநாதன்

பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரைக்கு வந்த ஏகநாதன், அரச சபையில் தனது யாழை மீட்டி, பல்வேறு ராகங்களைப் பாடி மன்னரையும், அவையில் இருந்தவர்களையும் மகிழ்வித்தான். மன்னரும் உரிய மரியாதைகளைச் செய்து, மதுரையில் சில நாட்கள் தங்கிச் செல்ல வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார்.

அதனை ஏற்றுக் கொண்ட ஏகநாதன், தன்னோடு இசைப்போட்டியில் பங்கேற்க தகுந்த கலைஞர்கள் யாரும் உள்ளார்களா? என்று கேட்டான். மன்னரும் அதுபற்றி விசாரித்து, உரிய சமயத்தில் இசைப்போட்டிக்கு ஏற்பாடு செய்வதாக கூறினார். ஏகநாதனுக்கும், அவனது சீடர்களுக்கும் ஓர் அரண்மனையைக் கொடுத்து அவர்களைத் தங்க வைத்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

வியந்த மதுரை

ஏகநாதனின் சீடர்கள் மதுரை கடைவீதிகளில் ஆங்காங்கே நின்று கொண்டு, பல்வேறு ராகங்களில் இசைபாடி மக்களை மகிழ்வித்தார்கள். சீடர்களே இவ்வளவு திறமைமிக்கவர்களாக இருந்தால், ஏகநாதன் எப்பேர்ப்பட்ட இசைக்கலைஞனாக இருக்க வேண்டும்! என்று மதுரை நகரமே வியப்பில் ஆழ்ந்தது.

‘ஏகநாதனுடன் இசைவாது செய்பவர் யார்?’ என்று அரச சபையில் மன்னர் வரகுண பாண்டியன் கேட்க, அரசவைக் கவிஞர்கள் எல்லோரும் தயங்கினார்கள். கடைசியில் சுந்தரேசபெருமான் சன்னதியில் நாள்தோறும் இசைபாடும் பாணபத்திரரை, ஏகநாதனோடு போட்டியிட வைக்கலாம் என்று முடிவானது.

அரசனின் ஆணையை அறிந்த பாணபத்திரர் மிகவும் வருந்தினார். மிகப்பெரிய கலைஞனான ஏகநாதனிடம் நாம் போட்டியிட முடியுமா? நாம் தோற்றால் நமக்கு மட்டுமல்ல, அரசனுக்கும், பாண்டிய நாட்டுக்கும் அவமானம் அல்லவா? என்று கவலை கொண்டார்.

தான் எப்போதும் அடிசேரும் சொக்கநாத பெருமானை தேடிச்சென்றார். அவரது சன்னதியில் கண்ணீருடன் தனது கவலையை வெளியிட்டார். இறைவனும் அவர் மீது கருணை கொண்டார்.

விறகுக்கு அதிக விலை

மறுநாள் காலையில் மதுரை வீதிகளில் ஒருவர் தலையில் விறகு கட்டைச் சுமந்தபடி வந்தார். இடையில் அழுக்கு வேட்டி கட்டி, ஒரு வாளை சொருகியபடி அவர் இருந்தார். கையில் அழகிய யாழ் ஒன்றும் இருந்தது. மக்கள் மத்தியில் யாழை இசைத்து, பாட்டுப்பாடியபடி அவர் நடனமும் ஆடியதைக் கண்டவர்கள் அவரது அழகில் மயங்கினர். அவர் வைத்திருந்த விறகுக்கு விலை கேட்டனர். ஆனால், யாரும் வாங்க முடியாத அபரிமிதமான விலையை அவர் கூறவும், மக்கள் அவரை பரிகாசம் செய்தனர்.

அகில உலகமும் ஸ்தம்பித்தது

இப்படியே அவர் ஒவ்வொரு வீதியாக சென்று, மக்களை ஏமாற்றியபடி, ஏகநாதன் இருக்கும் அரண்மனை தாழ்வாரத்துக்கு வந்து அமர்ந்தார். அவர் முணுமுணுத்த பாடல்களைக் கேட்ட ஏகநாதன் மயங்கிப்போய் வெளியே வந்தான். அவரைப்பற்றி விசாரித்தான்.

உடனே அவர், “அரசசபையில் நாளை உங்களோடு இசைவாதம் செய்யவிருக்கும் பாணபத்திரரின் சீடன் நான். வயதாகிவிட்டதால் விறகு விற்று பிழைக்கிறேன்” என்றார்.

“உனக்குத் தெரிந்த ராகங்களைப் பாடு” என்றான் ஏகநாதன்.

உடனே தனது யாழை கையில் எடுத்துக் கொண்டு சாகாரி ராகத்தில் அவர் பாடத் தொடங்கினார். அவர் பாடியதைக் கேட்டு ஏகநாதனும், அவனது சீடர்களும் மட்டுமல்ல அகில உலகமும் ஸ்தம்பித்து நின்றது. மரங்களும், கடல்களும், ஆறுகளும், பறவைகளும், விலங்குகளும், மனிதர்களும் அப்படி அப்படியே சிலையாகி நின்றனர். அந்த சமயத்தில் அவர் மாயமாக மறைந்தார். அடுத்த நிமிடம் அவையவை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பின.

சீடர்களுடன் தப்பிய ஏகநாதன்

மயக்கத்தில் இருந்து மீண்ட ஏகநாதன் அவரைத் தேடினான். அவர் பாடியது சாகாரி ராகத்தை விடவும் உயர்ந்த தேவகானம் அல்லவா! பாணபத்திரரின் சீடரே இந்தளவுக்கு பாடினார் என்றால், பாணபத்திரர் எவ்வளவு திறமைமிக்கவராக இருக்க வேண்டும் என்று எண்ணினான். அவரோடு போட்டிபோட்டு நாம் தோற்பதை விட, இரவோடு இரவாக தப்பிச் செல்வதே சிறந்தது என்று திட்டமிட்டான். உடனே சீடர்களை அழைத்தான். அனைவரும் அன்று இரவே யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் மதுரையில் இருந்து வெளியேறினர்.

மறுநாள் அரசவைக்கு அனைவரும் வந்தார்கள். பாணபத்திரரும் வந்தார். ஆனால் ஏகநாதனைக் காணவில்லை. அரசவை ஊழியர்கள் அவனைத் தேடிச் சென்றார்கள். அவன் தங்கியிருந்த அரண்மனை ஊழியர்கள், ‘யாரோ விறகு விற்கும் ஒருவர் வந்து பாடினார். உடனே அனைவரும் ஓடிவிட்டார்கள்’ என்றனர்.

இத்தகவல் அரசவைக்கு எட்டியது. அரசன் வியந்தான். ஈசன் சொக்கநாதரின் திருவிளையாடலே இது என்பதை அனைவரும் உணர்ந்தனர். பாணபத்திரருக்கு வேண்டிய கவுரவங்களைச் செய்து வழியனுப்பினார் மன்னர்.

ஆவணி மூலத் திருவிழா: விறகு விற்ற லீலை

தங்கத்தாலான விறகுகட்டு

மதுரை மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேசுவர பெருமான் திருக்கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் 10-ம் நாளில் விறகு விற்ற லீலைக் காட்சியை தரிசிக்கலாம். அப்போது, சுந்தரேசுவரர் இடுப்பில் வாள் அணிந்திருப்பார். தலையில் தங்கத்தாலான விறகுகட்டை சுமந்தபடி, இரு திருக்கைகளாலும் அதனைப் பிடித்திருப்பார். இடதுபக்கம் தங்கத்தாலான யாழ் ஒன்றும் இருக்கும். பிரியாவிடையும், மீனாட்சி அம்மனும் உடன் வீற்றிருப்பார்கள்.

இத்திருவிழாவின் 11-ம் நாளன்று சட்டத்தேர் வீதியுலாவும், இரவு 7 மணிக்கு சப்தாவர்ண சப்பரத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளலும் நடைபெறும். 12-ம் நாள் மாலையில் பொற்றாமரை குளத்தில்  தீர்த்தவாரியும், இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளலோடு திருவிழா நிறைவுபெறும்.

28.8.2023 - விறகு விற்ற லீலை

29.8.2023 - சட்டத்தேர் வீதியுலா. இரவில் சப்தாவர்ணம்.

30.8.2023 - பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரி, இரவில் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE