திருப்பதியில் நேற்று மாலை 7 மணிக்கு தொடங்கிய கனமழை விடிய விடிய பெய்தது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் நான்கு மாட வீதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் திருமலையில் சாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள் பெரும் அவதி அடைந்தனர்.
திருப்பதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. வார விடுமுறையான நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் அறைகள் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. எனவே பக்தர்கள் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இந்த சூழலில் நேற்று மாலை 7 மணிக்கு திருப்பதியில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால் குளிர் காற்றும் வீசியது. திடீர் கனமழையால் கோயிலின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. இதனால் தரிசனத்திற்கு வரிசையில் காத்திருந்த முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கடும் குளிரில் அவதி அடைந்தனர். நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலை வரை நீடித்தது.
பலத்த காற்றுடன் கொட்டிய மழையால் கடுமையான குளிரும் நிலவியது. இதனால் தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இடி, மின்னல் என கனமழை பெய்ததால் மலைப்பகுதியில் வெட்ட வெளியில் படுத்திருந்த பக்தர்கள் தவித்து போனார்கள்.
வெள்ளம் ஆற்றுநீர் போல் பெருக்கெடுத்து ஓடியதால் நடைபாதைகளே தெரியவில்லை. இதேபோல் வாகனங்கள் நிறுத்துமிடங்களிலும் மழை நீர் ஆர்ப்பரித்து ஓடியது. இதனால் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின. திருமலையில் நடைபாதையில் வியாபாரம் செய்யும் வணிகர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
விடிய விடிய கொட்டிய மழையால் திருமலையின் பெரும்பாலான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இன்று மாலையும் திருப்பதி திருமலையில் மழைக்கான வாய்ப்புள்ளதால் பக்தர்கள் முன்னேற்பாடுகளுடன் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.