சிவபெருமானின் திருவிளையாடல்களில் பிட்டுக்கு மண் சுமந்த வைபவமும் மன்னன் அரிமர்த்தன பாண்டியன் காலத்திலேயே நடந்தது.
அக்காலத்தில் வந்தியம்மை என்ற மூதாட்டி பிட்டு விற்று பிழைத்து வந்தாள். அதில் சொக்கநாதருக்கு முதலில் ஒரு பகுதி பிட்டை சமர்ப்பித்த பிறகே விற்பனையைத் தொடங்குவாள். ஏழ்மையிலும், முதுமையிலும் தவித்தாலும், இறைவனுக்கும், மன்னனுக்கும் கொடுக்க வேண்டிய கப்பத்தை முறையாக செலுத்தி வந்தாள். அவளது பெருமையை உலகறியச் செய்ய, வைகையில் வெள்ளத்தை பெருக்கெடுக்க வைத்தார் சிவபெருமான். தடுப்பணைகளைத் தாண்டி வெள்ளம் பாய்ந்ததைக் கண்ட மன்னன், அணையை உயர்த்தவும், வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும் வீட்டுக்கு ஒருவர் வீதம் வந்து வர வேண்டும் என ஆணையிட்டான். ஊர் மக்கள் எல்லாம் வைகைக் கரையில் திரண்டனர்.
ஆனால் வந்தியம்மை தனி ஆள். மன்னனின் கட்டளையையும் மீற முடியாது. எனவே தன் சார்பில் கூலிக்காவது ஒருவரை நியமித்து, வெள்ளத் தடுப்பு பணிக்கு அனுப்பலாமே என்று வந்தியம்மை ஆள் தேடினாள். அப்போது ஓர் இளைஞன் அங்கு வந்தான். வந்தியம்மையும் அவனிடம் பேசி தன் சார்பில் மன்னர் இட்ட பணிக்கு செல்ல ஒப்புதல் பெற்றாள். ஆனால் தன்னிடம் கூலிக்கு கொடுக்க பணம் இல்லை. தான் சமைத்த பிட்டையே கூலியாக கொடுத்தாள் அந்த இளைஞனும் பிட்டை சாப்பிட்டுவிட்டு பணிக்கு சென்றான்.
வைகையில் அணையை உயர்த்த ஒரு கூடை மண்ணை எடுத்து போடுவதும், பின்னர் வந்து படுத்துக் கொள்வதும், மீண்டும் ஒரு கூடை மண் சுமந்து செல்வதும், பின்னர் ஆட்டம் பாட்டத்தில் ஈடுபடுவதுமாக இருந்தான். திடீரென மரத்தடியில் வந்து படுத்துக்கொண்டான். வள்ளியம்மையின் வேலையாள் தூங்குவதைக் கண்ட மன்னன் அரிமர்த்தன பாண்டியன் தன் கையில் இருந்த பிரம்பால் அந்த இளைஞனின் முதுகில் அடிக்க, அந்த பிரம்படியானது அந்த இளைஞன் மீது படவில்லை. ஆனால் மன்னன் உட்பட அனைவரது முதுகிலும் அடி விழுந்து அலறினர். தான் அடித்தது தன் முதுகிலேயே விழுந்ததை எண்ணி மன்னன் வியந்தான்.
பின்னர் அந்த இளைஞனிடம் இப்படி வேலை செய்தால் வெள்ளத்தை எப்படி தடுப்பது என்று மன்னன் கேட்க, அந்த இளைஞன் மற்றொரு கூடை மண்ணை சுமந்து சென்று அணையில் கொட்ட, அந்த ஒரு கூடை மண்ணைக் கொட்டியதால் வெள்ளம் தடுத்து நிறுத்தப்பட்டது. வந்திருப்பது இறைவன் சொக்கநாதரே என்று உணர்ந்து அனைவரும் துதித்தனர். இதற்கு காரணமான வந்தியம்மையைத் தேடினர். சிவகணங்கள் அவளை பல்லக்கில் ஏற்றி அழைத்துச் செல்வதைக் கண்டனர்.
இதுவே பிட்டுக்கு மண் சுமந்த லீலை. வைகைக்கரையில் இந்த லீலை நடைபெற்ற இடத்தில் பிட்டு சொக்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அங்கு ஆவணி மாதம் மூல நட்சத்திர நாளில் இந்த லீலை நடைபெறும். இதற்காக மதுரையில் இருந்து மீனாட்சி அம்மன், பிரியாவிடை சமேதராக சுந்தரேசுவர பெருமானும், திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமானும், திருவாதவூரில் இருந்து மாணிக்கவாசகரும், பிட்டுத்தோப்புக்கு எழுந்தருள்வர். அப்போது சுந்தரேசுவர பெருமானுக்கு தங்கத்தால் தலைப்பாகை கட்டி, அதன்மேல் தங்கக் கூடை இருக்குமாறு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும்.
இவ்வேளையில் மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும். மாலையில் இவர்கள் தமது கோயிலுக்கு திரும்புவர்.
27.8.2023 பிட்டுக்கு மண் சுமந்த லீலை.