ரத்தசோறு சாப்பிட்ட பெண்கள் குழந்தை வேண்டி விநோத வழிபாடு!

By காமதேனு

தருமபுரி மாவட்டம் இருளப்பட்டியில் உள்ள அருள்மிகு காணியம்மன் கோயில் திருவிழாவில் குழந்தை பாக்கியம் வேண்டி பெண்கள் ரத்தசோறு சாப்பிட்ட திருவிழா நடைபெற்றது

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு காணியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் தேர்த்திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

இக்கோயிலில் ஒவ்வொரு நாளும் பல்வேறு விழாக்கள் மற்றும் சாமிக்கான வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. திருவிழாவுக்கு பூச்சாட்டியது முதலே காணியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வருகையும் அதிகரித்து உள்ளது. இதனால் தேரோட்டம் மிக விமரிசையாக நடந்தது. இதில் தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தருமபுரி இருளப்பட்டி

இதன் பின் திருவிழாவின் இறுதி நாள் விழாவில் பாப்பிரெட்டிபட்டி, இருளப்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சுற்றி உள்ள 50 கிராம மக்கள் ஒன்றிணைந்து அருகே உள்ள வனப்பகுதிக்கு மேளதளத்துடன் காணியம்மனை தூக்கிக்கொண்டு சென்றனர். அதன்பின்னர் அங்கு இருக்கும் தலை வெட்டி பெருமாள் கோயில் அருகே உள்ள ஆற்றங்கரையில் அம்மனுக்கு பச்சை போட்ட பின்னர், தலை வெட்டி பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விவசாயம் செழிக்க அம்மனை அங்கிருந்து வயல்வெளிக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து படையல் இட்டனர்.

இருளப்பட்டி ரத்தசோறு

அதன் பின் சக்தி அழைப்பு வந்தது. அப்போது அருள் வந்து ஆடிய கோயில் பூசாரி ஆட்டின் தலையை வெட்டி ரத்தத்தை உறிஞ்சி குடித்தார். பின்னர் அந்த ரத்தத்தை அம்மனுக்கு வைத்திருந்த படையலில் கலந்தார். அந்த ரத்தம் கலந்த சோற்றை குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், தீராத நோய் உள்ளவர்கள் வாங்கி சாப்பிட்டனர். இந்த சோறு சாப்பிட்டால் உடனே வேண்டுதல் நிறைவேறும் என் பக்தர்களால் காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. இதனால் ரத்த சோற்றை வாங்கி ஏராளமான பெண்கள் பயபக்தியுடன் சாப்பிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE