வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் தேர்விழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி வரும் செப்டம்பர் 7ம் தேதி நடைபெறுகிறது.
உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் இந்த ஆண்டிற்கான திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 8ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ள திருவிழா நாட்களில் 10 லட்சத்திற்கும் அதிகமானவர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவில் 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 2000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதனிடையே, வேளாங்கண்ணிக்கு 250 சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்க உள்ளது. அதுமட்டுமின்றி வேளாங்கண்ணி கடற்கரையில் திருவிழா நாட்களான ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை பாதுகாப்பு கருதி பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார்.
அதனால் இங்கு சுற்றுலா வரும் பயணிகள் ஆகஸ்ட் 29ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை கவனத்துடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு 2 நாட்கள் வேளாங்கண்ணி சுற்றுலாவை நடத்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் 2 நாட்கள் வேளாங்கண்ணி சுற்றுலாவை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 7 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா பயணத்திட்டத்தில் முதல் நாள் இரவு 10 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு வேளாங்கண்ணி சென்று, அதே பேருந்து மறுநாள் இரவு 10 மணிக்கு சென்னை வந்தடைகிறது. இந்த சுற்றுலாவில் 3 வேளை உணவுடன், உணவு இல்லாமல் என இருவகையாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா செல்லும் அனைவருக்கும் மாலை சிற்றுண்டி வழங்கப்படும். வேளாங்கண்ணி சுற்றுலா குறித்த மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டணமில்லா தொலைபேசி எண் 180042531111 மற்றும் தொலைபேசி எண்கள் 044-25333333, 044-25333444 ஆகிய எண்களை தொடர்பு கொண்டும், வலைதள முகவரி www.ttdconline.com மூலமாகவும் விவரங்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.