உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆவணித் திருவிழா இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 13-ந் தேதி நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் குருச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் ஆவணித் திருவிழாவின் தேரோட்டம் நடைபெறக்கூடிய 10-ம் திருநாளான செப்டம்பர் 13-ம் தேதி 150 சிறப்பு பேருந்துகளை பக்தர்களின் வசதிக்காக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருவிழா நாட்களில் 600 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முக்கிய திருவிழா நாட்களான 7ம் தேதி முதல் 10ம் தேதி வரையிலான நான்கு நாட்களுக்கு, நாள்தோறும் 5 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு மருத்துவக் குழு கோயில் வளாகத்திற்குள் அமைக்கவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.