சிவனடியார்களின் சிறப்பை மெய்ப்பிக்கும், நரியை பரியாக்கிய (குதிரையாக்கிய) லீலை

By மு.இசக்கியப்பன்

மதுரை மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதபெருமான் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் 8-ம் நாள் நிகழ்வாக சிவனடியார்களின் சிறப்பை மெய்ப்பிக்கும், நரியை பரியாக்கிய (குதிரையாக்கிய) லீலை அரங்கேறுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரம்

மதுரையை அரிமர்த்தன பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தார். அவரது அமைச்சராக மதுரை அருகே திருவாதவூரைச் சேர்ந்த தென்னவன் பிரம்மராயர் என்பவர் பணிபுரிந்தார்.

பாண்டியன் தனது படைக்கு குதிரைகள் வாங்கி வருமாறு ஏராளமான செல்வத்தை தனது அமைச்சரிடம் கொடுத்து அனுப்பினார். ஆனால் சிவபக்தராகிய தென்னவன் பிரம்மராயர் திருப்பெருந்துறையில் பாதியில் நின்ற சிவன் கோயில் திருப்பணியை, மன்னர் கொடுத்த செல்வத்தால் பூர்த்தி செய்தார்.

குதிரைகள் வாங்கச் சென்ற அமைச்சர் நெடுநாட்களாகியும் மதுரைக்கு திரும்பி வராததால் கோபமடைந்த மன்னர், அவரைத்தேடி ஒற்றர்களை அனுப்பினார். திருப்பெருந்துறையில் கோயில் திருப்பணியை அமைச்சர் செய்து கொண்டிருப்பதைக் கண்ட ஒற்றர்கள், இத்தகவலை மன்னரிடம் தெரிவித்தனர்.

அவரைக் கைது செய்து மதுரைக்கு கொண்டு வந்து சிறையில் அடைத்தார் மன்னர். சிறையில் வாடிய தென்னவன் பிரம்மராயர் சிவபெருமானை வேண்டினார். அப்போது, தமது பூதகணங்களை வீரர்களாகவும், வைகையாற்றின் கரையில் திரிந்த நரிகளை குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பிவைத்தார் சிவபெருமான்.

வீரர்கள் ஓட்டிவந்த குதிரைகளைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்த மன்னர், சிறையில் இருந்து அமைச்சரை விடுவித்தார். ஆனால், அரண்மனைக் கொட்டடியில் கட்டி வைக்கப்பட்டிருந்த குதிரைகள் அன்று இரவு மீண்டும் நரிகளாக மாறி ஊளையிட்ட படி தப்பிச் சென்றன. அவற்றை ஓட்டிவந்த பூதகணங்களும் மாயமாக மறைந்தன.

இரவோடு இரவாக அங்கு ஓடிவந்த மன்னர் இவற்றையெல்லாம் பார்த்து கோபமடைந்தார். அமைச்சரை மீண்டும் கைது செய்து, கை, கால்களைக் கட்டி வைகையாற்றில் சுடுமணலில் கிடத்தினார். சிவபெருமானின் அருளால் வைகையில் தண்ணீர் ஓடிவந்து சூட்டைத் தணித்து, அமைச்சரைக் காத்தது.

வியந்துபோன மன்னர் அரிமர்த்தன பாண்டியன், அமைச்சரை விடுவித்தார். மன்னரும், அமைச்சரும் கோயிலுக்கு சென்று சொக்கநாதரின் அடிபணிந்தனர். அப்போது அமைச்சரின் சிவத்தொண்டை உலகுக்கு தெரிவிக்கவே நரிகளை பரிகளாக்கி (குதிரைகளாக மாற்றி), கோடையிலும் வைகையில் நீர் பெருகச் செய்ததை ஈசன் வெளிப்படுத்தினார்.

அமைச்சராக நாட்டுக்கு தொண்டு செய்த தென்னவன் பிரம்மராயர் அப்பணியைக் கைவிட்டு சிவத்தொண்டில் ஈடுபடலானார். அவரே சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசக சுவாமிகள்.

மதுரை மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதபெருமான் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் 8-ம் நாளன்று காலையில் சுவாமி தங்கச்சப்பரத்தில் வீதியுலா வருவார். அன்று மாலையில் நரியை பரியாக்கிய வைபவம் நடைபெறும். இவ்விழாவுக்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமானும், திருவாதவூரில் இருந்து மாணிக்கவாசகப் பெருமானும் மதுரைக்கு எழுந்தருள்வர். இரவில் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருள்வார்.

26.8.2023 - நரியை பரியாக்கிய வைபவம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE