தாருகாவனத்தில் வாழ்ந்த முனிவர்கள் இறைவழிபாட்டைக் கைவிட்டு, வேள்வி செய்தலை மட்டுமே செய்து வந்தனர். இதற்கு மீமாம்சை என்று பெயர். இக்கொள்கையை பின்பற்றுபவர்களிடம் இறைநம்பிக்கை இருக்காது. ஆனால், யாகங்கள் செய்து தாங்கள் வேண்டியவற்றை ஈட்டுவார்கள். இவ்வாறு வேள்வி செய்த ரிஷிகள் தாங்களே இறைவன் என்று அகங்காரம் கொண்டனர். அதுபோல், இவர்களின் மனைவியரான ரிஷிபத்தினிகள் அழகிலும், கற்பிலும் தங்களைவிடச் சிறந்தவர் யாருமில்லை என்று அகங்காரம் கொண்டனர்.
இவர்களின் அகங்காரத்தை அடக்க மகாவிஷ்ணு மோகினி ரூபம் கொண்டார். சிவபெருமான் பிட்சாடனர் ரூபம் கொண்டார். மோகினியின் அழகில் மயங்கிய முனிவர்கள் தங்கள் செயல்மறந்து குழம்பி நின்றனர். பிட்சாடனரின் அழகில் மயங்கிய ரிஷிபத்தினிகள் அவரது பின்னாலேயே சென்று, தங்கள் நிலையழிந்தனர்.
இருவரும் மறைந்ததும், மயக்கம் கலைந்த ரிஷிகள் தங்களது நிலையையும், தங்கள் பத்தினிகளின் நிலையையும் எண்ணி வெட்கினர். சிவபெருமானை அழிக்க யாகங்கள் செய்து பூதகணங்களை உருவாக்கினர். ஆனால் அவற்றையெல்லாம் சிவபெருமான் நிர்மூலமாக்கினார். உண்மையை உணர்ந்த ரிஷிகள் சிவபெருமானின் பாதங்களை வணங்கித் துதித்தனர்.
பின்னர், மற்றொருவரின் அழகில் மயங்கி நிலையழிந்த தங்கள் பத்தினிகளை, மதுரையில் மானுட குலத்தில் பிறக்குமாறு சபித்தனர். சிவபெருமான் மூலமாகவே சாபவிமோசனம் கிடைக்கும் என்றும் விடையளித்தனர்.
இதன்படி மதுரையில் வாணியர் குலத்தில் பிறந்த ரிஷிபத்தினிகள், பருவமெய்தியபோது பேரழகு மிக்கவர்களாக விளங்கினர். ஒருநாள் வளையல் வியாபாரி ஒருவர், விதவிதமான வளையல்களை தோள்களிலும், கைகளிலும் சுமந்துகொண்டு மதுரை கடைவீதிகளில் நடமாடினார். அவரது அழகிலும், அவர் கொண்டு வந்திருந்த வளையல்களின் அழகிலும் மயங்கிய ரிஷிபத்தினிகள், அவரிடம் வளையல்களை வாங்கி அணிந்து கொண்டனர். அவரிடம் பேசவும், அவரைக் கேலி செய்யவும் விரும்பி அவர் அணிவித்த வளையல்களை உடைத்துக்கொண்டு, மீண்டும் அவரைத் தேடி வந்து வளையல் அணிந்தனர். அவரும் அத்தனைப் பெண்களுக்கும் விதவிதமான வளையல்களை, கேலியும், கிண்டலுமான வார்த்தைகளைக் கூறி அணிவித்தார். வளையலுக்கான விலை கேட்டபோது, விலையை மறுநாள் பெற்றுக் கொள்வதாக அவர் கூறினார்.
இதனால், கடைவீதியில் அவர் செல்லுமிடமெல்லாம் இப்பெண்களும் பின்னாலேயே கூட்டமாகச் சென்றனர். சொக்கநாதர் சன்னதிக்குள் நுழைந்த அந்த வியாபாரியை, பெண்களும் பின் தொடர, திடீரென அந்த வியாபாரி மாயமானார். அப்போதுதான் வந்திருப்பது சிவபெருமான் என்பதும், தங்களுக்கு முற்பிறவியில் கிடைத்த சாபத்தை தீர்க்கவே சிவபெருமான் வியாபாரியாக வந்து வளையல்களை தங்களுக்கு அணிவித்தார் என்பதையும் அறிந்தனர். சிவனடியார்களாகி, தொண்டுகள் பல செய்து, சாபம் நீங்கப்பெற்று, ஈசனடியை அடைந்தனர். இதுவே திருவிளையாடல் புராணத்தில் வளையல் விற்ற படலம் எனப்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேசுவர பெருமான் திருக்கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் ஏழாம் நாள் காலையில், வளையல் விற்ற படலக் காட்சியை தரிசிக்கலாம். இந்த அலங்காரத்தின்போது, சுந்தரேசப் பெருமான் ஏராளமான வளையல்களை கையில் வைத்திருப்பார். அதுபோல், கோயில் பட்டரும் இரு கைகளிலும், தோள்களிலும் வளையல்களை சுமந்தபடி, சுவாமியுடன் வீதியுலா வருவார்.
அத்துடன் அன்று இரவில் சுந்தரேசப் பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். சித்திரை மாதம் முதல் ஆடி மாதம் வரை நான்கு மாதங்களுக்கு மதுரை மகாராணியாக மீனாட்சி அம்மன் ஆட்சி செய்வார். ஆவணி மூலத் திருநாளின் 7-ம் நாள் முதல் பங்குனி வரையான எட்டு மாதங்களுக்கு மதுரை மன்னராக சுந்தரேசப் பெருமான் ஆட்சிபுரிவார். இதனைக் குறிக்கும் வகையிலேயே அன்று இரவு சுந்தரேசப் பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.
25.8.2023 காலை - வளையல் விற்ற லீலை. இரவு - பட்டாபிஷேகம்.