திருவிளையாடல் புராணத்தில் கூடற்காண்டத்தில் 27-வது படலமாக இடம்பெற்றிருப்பது பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை.
பெண்களுக்கு துயரிழைப்போருக்கு இறைவனே தக்க தண்டனை தந்து, அப்பெண்களைக் காப்பார் என்பதற்கு சாட்சியாக விளங்குவது இந்தப் படலம்.
மதுரையில் குலோத்துங்கப் பாண்டியன் ஆட்சிபுரிந்த காலத்தில் வாள் பயிற்சி அளிக்கும் ஆசிரியர் ஒருவர், தனது மனைவி மாணிக்கமாலையுடன் வசித்து வந்தார். அதீத சிவபக்தி கொண்ட தம்பதியர் இருவரும் தினமும் சொக்கநாதரை தவறாது வழிபட்டு வந்தனர்.
வைகைக் கரையில் ஒரு குடில் அமைத்து, மாணவர்களுக்கு வாள் சண்டைப் பயிற்சி அளித்து வந்த குருவிடம் சித்தன் என்பவன் வாள் பயிற்சி பெற வந்தான். வாள் கலையை முறையாகக் கற்று, குருவை விட சிறந்த வீரனாக தேர்ச்சிபெற்றான். இதனால் சித்தனுக்கு கர்வம் ஏற்பட்டது. குருவுக்குப் போட்டியாக மற்றொரு பயிற்சிக்கூடம் அமைத்தான். குருவின் திறமைகளை இழிவாகவும் பேசி வந்தான். ஆயினும் அவனது நடவடிக்கைகளால் குரு எந்தவித மன வருத்தமுமின்றி தனது பணியை தொடர்ந்து செய்து வந்தார். இதனால் சித்தனுக்கு மமதை மிகுந்தது.
ஒரு நாள் வீட்டில் குரு இல்லாத சமயத்தில் அவரது வீட்டுக்குள் சித்தன் புகுந்தான். குருவின் மனைவி மாணிக்கமாலையிடம் தவறாக நடக்க முற்பட்டான். பயந்துபோன மாணிக்கமாலை வீட்டின் உள் அறைக்குள் தப்பியோடி, தாழிட்டுக் கொண்டாள்.
“என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது. எப்படியும் ஒருநாள் உனது கணவனை வாட்போரில் கொன்று, உன்னை அடைந்தே தீருவேன்” என்று கூறிவிட்டு சித்தன் அங்கிருந்து சென்றான்.
சித்தனின் தீய செயலை கணவரிடம் கூறினால், அவருக்கும், சித்தனுக்கும் சண்டை ஏற்பட்டு, வயது முதிர்ந்த தனது கணவர் இறக்க நேரிடுமே என்று வருந்தினாள். சித்தனின் தொல்லை தொடர்ந்தது. திக்கற்றவளான மாணிக்கமாலை சொக்கநாதர் சன்னதிக்கு சென்று முறையிட்டாள்.
“இறைவா! இந்த இக்கட்டில் இருந்து என்னையும், என் கணவரையும் காப்பாற்று” என்று அடிபணிந்தாள். இறைவனும் மனம் கசிந்தார்.
அன்றைக்கு குருவின் தோற்றத்தில் சித்தனின் வீட்டுக்கு இறைவன் சென்றார்.
“சித்தா உன்னுடன் வாட்போர் புரிய வந்திருக்கிறேன். ஊருக்கு வெளியே நமது சண்டையை வைத்துக் கொள்ளலாம் வா” என்று அழைத்தார். அதற்காகவே காத்திருந்த சித்தனும், வாட்சண்டையில் அவரைத் தோற்கடித்து மாணிக்கமாலையை அடைந்து விட வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு அவர் அழைத்த இடத்துக்கு சென்றான். இவர்களின் வாட்சண்டையைப் பார்க்க மதுரை மக்களும், குருவின் சீடர்களும் அங்கு திரண்டனர். இருவருக்கும் இடையே போர் தொடங்கியது. சிறிது நேரத்திலேயே சித்தன் தோற்கத் தொடங்கினான்.
“மாணிக்கமாலையை இழிவாகப் பேசிய நாக்கு இதுதானே. அவளை இழிவாகப் பார்த்த கண்கள் இதுதானே. அவளைத் தீண்டத் துணிந்த கைகள் இதுதானே” என்று கூறியவாறு சித்தனின் ஒவ்வொரு அவயங்களையும் தனது வாளினால் வெட்டித் தள்ளினார் குரு. கடைசியில் சித்தன் இறந்தான். குரு திடீரென மாயமானார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த குருவின் சீடர்கள் அவரது இல்லத்துக்கு ஓடி வந்தார்கள். அங்கு மாணிக்கமாலை மட்டும் இருந்தாள். குரு எங்கே? என்று கேட்டனர். அவர் சொக்கநாதரை வழிபட கோயிலுக்குச் சென்றிருப்பதாக அவள் தெரிவித்தாள். அப்போது குருவும் அங்கு வந்து சேர்ந்தார்.
“குருவே வாட்போரில் சித்தனைக் கொன்றதும் நீங்கள் மாயமாக மறைந்து விட்டீர்களே? அது எப்படி?” என்று ஆச்சர்யத்தோடு சீடர்கள் கேட்டனர்.
“வாட் போரா? நான் சித்தனைக் கொன்றேனா?” என்று குரு வியப்போடு கேட்டார். சீடர்கள் நடந்தவற்றை எல்லாம் கூறினார்கள். மாணிக்கமாலையும் தன்னிடம் சித்தன் தவறாக நடந்ததையும், இறைவனிடம் தான் முறையிட்டதையும் கூறினாள்.
இதுவரை தான் சொக்கநாதர் சன்னதியில் இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்ததாகவும், தனது உருவில் சித்தனுடன் போரிட்டது சொக்கநாதரே என்றும், கண்ணீர்விட்டபடி குரு கூறினார். இத்தகவல் குலோத்துங்க பாண்டியனை எட்டியது. உடனே தனது பட்டத்து யானை மீது குருவையும், மாணிக்கமாலையையும் அமரவைத்து ஊர்வலம் வரச் செய்தான். அனைவரும் அவர்களைப் போற்றித் துதித்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதப் பெருமான் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் ஆறாம் நாள் நிகழ்வாக பாணனின் அங்கம் வெட்டிய லீலைக் காட்சி நடைபெறும். அப்போது சுந்தரேசப் பெருமான வலது கையில் வாளும், இடது கையில் கேடயமும் கொண்டு காட்சியளிப்பார். கோயில் பட்டரும் அதுபோது வாளும், கேடயமுமாக வந்து இந்த லீலையை நடித்துக் காண்பிப்பார்.
24.8.2023 - பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை.