1 கிலோ மல்லிகை ரூ.800, கனகாம்பரம் ரூ.1600.... வரலட்சுமி நோன்பால் எகிறிய பூ விலை!

By காமதேனு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மலர் சந்தையில் வரலட்சுமி நோன்பு பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பூக்களுக்கு அதிக விலை கிடைப்பதால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒசூர் பகுதியில் தெலுங்கு, கன்னடம் பேசக்கூடிய மக்கள் அதிக அளவில் இருப்பதால் வரலட்சுமி நோன்பு பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமையில் வரலக்ஷ்மி நோன்பு கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆக.25-ம் தேதி இந்த விழா கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக ஓசூர் மலர் சந்தையில் தற்போதே பூக்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது.

பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் பூக்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு பூக்களுக்கு அதிக விலை கிடைப்பதால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மல்லிகைப் பூவின் கிலோ ஒன்றுக்கு ஆறுநூறு ரூபாய் விற்கப்பட்ட நிலையில் தற்போது 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல, கனகாம்பரம் பூவின் 1600 ரூபாய்க்கும், முல்லை 600 ரூபாய்க்கும், சாமந்திப்பூ 240 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதால் நல்ல லாபம் கிடைப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

விற்பனை எதிர்பார்த்த அளவை காட்டிலும் அதிகமாகவே உள்ளது என தெரிவிக்கும் வியாபாரிகள், அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து பூக்களை வாங்கிச் செல்வதாக கூறுகின்றனர். வரலட்சுமி நோன்பு, விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணம் ஆகிய பண்டிகைகள் ஒரே நேரத்தில் வந்திருப்பதால் மலர் விற்பனை சூடு பிடித்துள்ளதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

VIEW COMMENTS