திருப்பதி கோயில் தேவஸ்தானம் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய அவ்வப்போது புதிய நடைமுறைகளை கொண்டுவருகிறது. தற்போது பக்தர்களின் உடைமைகளை பாதுகாக்க புதிய வசதி நடைமுறைக்கு வந்துள்ளது.
ஏழுமலையானை தரிசிக்க நடந்து வரும் பக்தர்கள் தங்கள் உடைமைகளை அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு அடிவாரங்களில் உள்ள தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைத்தால் அவை திருமலைக்கு வந்து சேர்ந்துவிடும். தற்போது இந்த நடைமுறையானது நேற்று முதல் மேலும் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, உடைமைகளை ஒப்படைக்கும் பக்தர்களுக்கு ஆதார், செல்போன் எண்கள் மூலமாக டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. அவர்கள் நடந்து கோயிலுக்கு வந்த பின்னர், திருமலையில் உள்ள வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ், ரூ.300 சிறப்பு தரிசன மையம் ஆகிய பகுதிகளில் தங்கள் உடைமைகளைத் திரும்ப பெறலாம். இந்த வசதி தற்போது பக்தர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.