நெல், தினை, கம்பு போன்ற தானியங்களை அளக்கும் போது, பண்டைக்கால முகத்தல் அளவையில் கோட்டை என்ற ஓர் அளவை உண்டு. நான்கு பக்கா (படி) கொண்டது ஒரு மரக்கால். 24 மரக்கால் கொண்டது ஒரு கோட்டை. இதுவே உலவாக்கோட்டை எனப்படுகிறது.
இந்து சமயத்தில் சைவம், வைணவம் என எந்தவொரு கோட்பாடாக இருந்தாலும், இறைவனைத் தொழுவதற்கு சமமாக, இறைவனின் அடியார்களைத் தொழுவதும் போற்றப்படுகிறது. தனது அடியார்களை பக்தர்கள் பூசிப்பதை இறைவனும் விரும்புகிறான்.
திருவிளையாடலில் உலவாக்கோட்டை அருளிய படலத்தில், அடியார்களைப் பேணும் ஓர் அடியாரின் பெருமை பேசப்படுகிறது. மதுரையில் வேளாளர் மரபில் பிறந்த அடியார்க்கு நல்லான் என்ற சிவபக்தர், தனது மனைவி தருமசீலையுடன் வாழ்ந்து வந்தார். சிவனடியார்களின் பசிப்பிணி போக்குவதையே தன் கடனாக இத்தம்பதியர் செய்து வந்தனர். தான் விளைவித்த தானியங்களில் ஆறில் ஒரு பகுதியை அரசுக்கு திரையாக செலுத்துவார். மீதமுள்ள ஐந்து பங்கினையும் அடியார்களுக்கு அன்னமிடுவதற்கே செலவிட்டு வந்தார்.
இவரது புகழ் நாடு முழுக்க பரவியது. இவரது இல்லத்தில் அமுதுண்ணும் அடியார்களின் எண்ணிக்கையும் பன்மடங்காகப் பெருகியது. ஆனாலும் எவ்வித மனச்சோர்வுமின்றி தனது அறத்தை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். செல்வம் குறையத் தொடங்கியது. விளைநிலங்களை விற்கத் தொடங்கினார். இதனால் விளைச்சல் குறைந்து தானிய வரத்து குறையத் தொடங்கியது. உடனே, மதுரையில் இருந்த செல்வந்தர்களிடம் கடன் வாங்கி அன்னதானத்தை தொடர்ந்தார். வாங்கிய கடனை திரும்பக் கொடுக்க இயலாததால், மேலும் கடன் வழங்க அனைவரும் மறுத்தனர். இறைவனின் திருவிளையாடலால் மழை பொய்த்து கடன் பெருகியது. ஏழ்மை காரணமாக அடியார்களுக்கு அன்னமிட முடியாத நிலை ஏற்பட்டு, அடியார்க்கு நல்லானும், தருமசீலையும் பட்டினிக்கு ஆளானார்கள்.
தாங்கள் பட்டினி கிடப்பதை விட, உணவுக்காக தங்கள் இல்லத்துக்கு தேடி வந்து ஏமாந்து செல்லும் சிவனடியார்களைக் கண்டு தம்பதியர் இருவரும் மனம் வருந்தினர். சொக்கநாதர் சன்னதிக்கு தினமும் சென்று, சிவனடியார்களுக்கு அன்னமிட முடியாத தங்கள் நிலையை எண்ணி கண்ணீர் விட்டனர். தங்களுக்கு கடன் தருவார் யாரும் மதுரையில் இருந்தால் அவர்களை அடையாளம் காட்டுமாறு இறைவனிடம் வேண்டுவதே இவர்களின் வழக்கமாயிற்று. இறைவனும் மனமிறங்கினான்.
ஒரு நாள் சொக்கநாதரை வழிபட்டு வீட்டுக்கு வந்தனர். வீட்டுக்குள் ஒரு கோட்டை அரிசி குவித்து வைக்கப்பட்டிருந்தது. தம்பதியருக்கு பெரும் அதிசயமாக இருந்தது. பூட்டியிருந்த வீட்டுக்குள் அரிசி வந்தது எப்படி என்று திகைத்தனர். அப்போது அசரிரீயாக இறைவன் குரல் கேட்டது.
“அள்ள அள்ளக் குறையாத இந்த அரிசியைக் கொண்டு என் அடியார்களின் பசியைப் போக்குவீர்” என்று இறைவன் ஆணையிட்டார்.
அப்படியே அடியார்க்கு நல்லானும், தருமசீலையும் அந்த அரிசிக் கோட்டைக்கு தினமும் முறைப்படி பூஜை செய்து, அடியார்களுக்கு தேவையான அளவு அரிசியை எடுத்து, அடியார்களின் பசிப்பிணியைப் போக்கினர். கடைசியில் இறைவனின் திருவடியையே அடைந்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் பெருமான் திருக்கோயிலில் நடைபெறும் ஆவணி மூலத் திருவிழாவில் ஐந்தாம் நாளன்று உலவாக்கோட்டை அருளிய லீலைக் காட்சியை தரிசிக்கலாம்.
23.8.2023 - உலவாக்கோட்டை அருளிய லீலை.