பைக் ஓட்டும் முருகன், பின்னால் அமர்ந்திருக்கும் விநாயகர்! விதவிதமாக தயாராகும் சிலைகள்

By காமதேனு

விநாயகர் சதுர்த்தி விழா நெருங்குவதை முன்னிட்டு கோவையில் விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்துவார்கள். இதைத்தவிர பொது இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்து வழிபாடு நடத்துவார்கள்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் செல்வபுரம், புட்டுவிக்கி சாலை, கவுண்டம்பாளையம், தெலுங்குபாளையம், சுண்டக்காமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மே மாதத்தில் இருந்து விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. பொது இடங்களில் வைத்து வழிபட வெளியூர்களில் இருந்து அதிக அளவில் ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளதால் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் இந்த தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

விவசாயி தோற்றத்தில் இருக்கும் விநாயகர், முருகன் புல்லட் ஓட்ட பின் இருக்கையில் விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற சிலை, கடல்கன்னி உருவத்தில் இருக்கும் விநாயகர் சிலை, சனீஸ்வரருடன் இருக்கும் விநாயகர் சிலை, சிங்க வாகனத்தில் இருக்கும் விநாயகர் சிலை, டிராகன் மீது இருக்கும் விநாயகர் சிலை, மயில் மீது அமர்ந்திருக்கும் விநாயகர் சிலை, சிவன் சிலையை ஏந்தி நிற்கும் பாகுபலி விநாயகர் ஆகிய பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு தகுந்த வகையில் இருக்கும். தண்ணீரில் எளிமையாகக் கரையக் கூடிய வகையில் கிழங்கு மாவு, ஓடக்கல் மாவு, பேப்பர் கூழ் ஆகியவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இரண்டு அடி முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகள் உள்ளன. மூலப்பொருட்களின் விலை உயர்வால் விநாயகர் சிலைகளின் விலையும் சிறிய அளவில் உயர்த்தப்பட்டு சிறிய அளவிலான சிலைகள் 200 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 அடி உயரம் உள்ள சிலைகள் 10000 ரூபாய் முதல் 30000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE