தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் புகழ்பெற்ற குற்றாலநாதர் ஆலயம் உள்ளது. இங்குள்ள அருவியில் நீராடி, குற்றால நாதரை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அன்றாடம் வருகின்றனர். இதேபோன்று, சபரிமலைக்கு மாலை அணிந்து, சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களும் குற்றாலம் பேரருவியில் வந்து குளித்துவிட்டு குற்றாலநாதரை தரிசித்து விட்டுச் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.
தேவாரப் பாடல்பெற்ற சிவஸ்தலமாகவும், குற்றாலக் குறவஞ்சி பாடப்பட்ட ஸ்தலம் என பல்வேறு சிறப்புகளைப் பெற்றது குற்றாலநாதர் ஆலயம். இந்த ஆலையத்தில் இறைவனுக்கு படைக்கப்படும் உணவும், பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதமும் தரமற்றதாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, தென்காசி வட்டார உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் நாகசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள், குற்றாலநாதர் ஆலயத்தினுடைய உணவு மற்றும் பிரசாதம் தயாரிக்கும் அறையில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 850 கிலோ கெட்டுப்போன பச்சரிசி, பலமுறை பயன்படுத்தப்பட்ட 48 லிட்டர் எண்ணெய் மற்றும் 15 கிலோ பச்சரிசி மாவு, வெல்லம் உள்ளிட்டவை இருப்பதைக் கண்டறிந்தனர். மேலும், இந்த பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குற்றாலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள உணவகங்களில் தரமற்ற உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், குற்றாலநாதர் ஆலையத்தில் இறைவனுக்கு படைக்கப்படும் பிரசாத உணவுப் பொருட்களும் தரமற்ற வகையில் இருந்தது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.