மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவின் மூன்றாவது நாளில் ‘மாணிக்கம் விற்ற லீலை’ என்ற திருவிளையாடலை தரிசிக்கலாம்.
மதுரை சொக்கநாத பெருமானின் திருவிளையாடல் புராணத்தில் முதற் காண்டமாகிய மதுரைக் காண்டத்தில், மாணிக்கம் விற்ற லீலை படலம் 17-வது படலமாக அமைந்திருக்கிறது.
மதுரையை ஆண்ட மன்னன் வீரபாண்டியனுக்கு புத்திரப் பேறு இல்லாமல், மன்னனும், அரசியும் வருந்தினர். இருவரும் பல்வேறு விரதங்கள் மேற்கொண்டு சொக்கநாதப் பெருமானை வணங்கி வந்தனர். அதன்பயனாக அரசிக்கு அழகிய புத்திரன் பிறந்தார். உரிய காலத்தில் இளவரசன் செல்வ பாண்டியனுக்கு வேண்டிய சாதகர்மங்களை மன்னர் விமரிசையாக நடத்தினார்.
வேளாண் குடிமக்களை வனவிலங்குகளிடம் இருந்து காப்பதற்காக ஒருமுறை மன்னர் வேட்டைக்குச் சென்றார். அப்போது விதிவசத்தால் புலியால் தாக்கப்பட்டு வீரபாண்டிய மன்னர் மரணம் அடைந்தார். அனைவரும் கலங்கினர். மன்னரின் இறுதிச் சடங்குகளை சிறுவனாக இருந்த இளவரசனைக் கொண்டு அமைச்சர்கள் நடத்தினார்கள். பின்னர் இளவரசனுக்கு பட்டாபிஷேகம் செய்வது என முடிவெடுத்தனர்.
பட்டாபிஷேகத்துக்கான மணிமகுடத்தை அரண்மனைக் கருவூலத்தில் தேடியபோது அது காணாமல் போயிருந்தது. ஒரு நாட்டின் மானம் மணிமுடியில்தான் அடங்கியிருக்கிறது. அதனை எங்கு தேடியும் கிடைக்காததால் மனம் வருந்திய மந்திரிகள், சொக்கநாதபெருமானிடம் சென்று முறையிடுவோம் என எண்ணி, அனைவரும் திரண்டு இளவரசனையும் அழைத்துக் கொண்டு கோயிலுக்கு வந்தனர்.
மீனாட்சி அம்மன் கோயில் வாசலில் சிவபெருமான் ஒரு வைர வியாபாரி போல வேடமிட்டு நின்று கொண்டிருந்தார். மந்திரிமார்கள் வருவதைப் பார்த்து அவர்களிடம், “நீங்கள் அனைவரும் கவலையோடு வருவது ஏன்?” என்று அந்த வியாபாரி கேட்டார். மந்திரிமார்களும் அந்த வியாபாரியின்பால் மனம் ஈர்க்கப்பட்டு அரண்மனையில் நடந்த விவரங்களைக் கூறினர்.
அந்த வியாபாரியும், “இதற்காக ஏன் நீங்கள் மனம் வருந்த வேண்டும். என்னிடம் விலையுயர்ந்த மாணிக்கங்களும், வைரங்களும் உள்ளன. அவற்றைக் கொண்டு புதிதாக மணிமகுடம் செய்து இளவரசனுக்கு முடிசூட்டலாம்” என்றார்.
மதுரையில் அந்த வியாபாரியை அதற்கு முன் யாரும் பார்த்ததே இல்லை. ஆனால் தங்கள் மதிமயங்கிய மந்திரிமார்கள், “சரி அப்படியே செய்யலாம்” என்றார்கள்.
கோயிலுக்குள் இருக்கும் மண்டபத்துக்கு அந்த வியாபாரி செல்ல, பின்னாலேயே மந்திரிகளும் சென்றார்கள். அங்கு ஓரிடத்தில் அனைவரையும் அமரச் செய்து, தன்னிடமிருந்த பட்டாடை பொட்டலத்தை அந்த வியாபாரி பிரித்துக் காண்பித்தார்.
அதில் அதுவரை யாரும் கண்டிராத புத்தொளி வீசிய மாணிக்கங்களைக் கண்டு அனைவரும் அதிசயித்தார்கள். ஏற்கெனவே மதிமயங்கிக் போயிருந்த மந்திரிமார்கள், வாயடைத்துப் போய் இருந்தார்கள். பொன்னால் புதிதாக மணிமகுடம் செய்து, அந்த மகுடத்தில் தான் கொண்டு வந்திருந்த மாணிக்கங்களையும் பதித்துக் கொடுத்தார் அந்த வியாபாரி. தெய்வீகமாக காட்சி தந்த அந்த மணிமுடியைப் பார்த்து அனைவரும் மகிழ்ந்தார்கள்.
“மந்திரிகளே இளவரசனுக்கு இந்த மணிமுடியை அணிவித்து, பட்டாபிஷேகம் செய்யுங்கள். அதன்பிறகு இளவரசனுக்கு அபிஷேகப் பாண்டியன் என பெயர் சூட்ட வேண்டும்” என்று அந்த வியாபாரி கூறினார். அனைவரும் அதை ஏற்றுக் கொண்டார்கள்.
அதன்படியே இளவரசனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. விழாவிற்கு அந்த வியாபாரியும் வந்திருந்தார். அவரை கெளரவப்படுத்த வேண்டும் என மந்திரிகள் நினைத்து, அவரைத் தேடினர். எங்கு தேடியும் அவரைக் காணவில்லை. விழாவில் பங்கேற்றவர் எப்படி மாயமானார் என்று அனைவரும் அதிசயித்த போது, மீனாட்சி அம்மனுடன், சொக்கநாத பெருமான் அனைவருக்கும் காட்சிதந்தார்.
பாண்டிய நாட்டின் மானம் காத்த சொக்கநாத பெருமானை அனைவரும் போற்றித் துதித்தனர். மன்னர் அபிஷேகப் பாண்டியனின் ஆட்சிக் காலத்திலும் சில திருவிளையாடல்களை ஈசன் அரங்கேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
21.8.2023 - மாணிக்கம் விற்ற திருவிளையாடல் படலம்.