கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தென்பாக்கம் செங்கல் கிராமத்துக்கு உட்பட்ட பெரிய சேங்கல் காமாட்சியம்மன், பச்ச மலையாச்சி அம்மன், கருப்பண்ணசாமி, மதுரை வீரன் உள்ளிட்ட ஆலயத்தின் திருவிழா நடைபெற்றது. அந்த கோயிலை சுற்றியுள்ள ஊர்களை சேர்ந்த குடும்பங்கள் ஒன்று கூடி இந்த திருவிழாவை நடத்தினர். திருவிழாவின் தொடக்கமாக காவிரியில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து, விரதம் இருந்த ஆண்களும், பெண்களும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற தலையில் தேங்காய் உடைத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஆண்கள், பெண்கள் உள்ளிட்டோர் அமர வைக்கப்பட்டு, அவர்களுக்கு கோவில் பூசாரியால் சாட்டையடி நிகழ்ச்சி நடைபெற்றது.
இங்கு சாட்டையடி பெறுவோர்களிடம் இருந்து காற்று, கருப்பு, ஏவல் உள்ளிட்டவைகள் அவர்களை விட்டு நீங்கும் என்பது ஐதீகம். இந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து பங்காளிகள் ஒன்று கூடி பொங்கல் வைக்கும் வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.