நாரைக்கு முக்தி தந்த ஈசன்

By மு.இசக்கியப்பன்

மனிதனாகப் பிறந்தவர்கள் தமது அறிவால் இறைஞானம் பெற்று, இறைவனைத் தொழுது அவன்திருவடியை அடைவது பெரிதல்ல. சாதாரண நான்கறிவு பறவையாகப் பிறந்த ஒரு நாரைக்கு, ஜீவகாருண்ய அறிவு ஏற்பட்டு, இறைவனின் திருவடி தொழுது முக்தி பெற்றது, ஈசனின் 64 திருவிளையாடல்களில் முக்கியமானது.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் பொற்றாமரைக் குளம்

திருவாலவாய் எனப்படும் மதுரையில் முற்காலத்தில் வைகை நதிக்கரையெங்கும் அடர்ந்த காடுகள் நிறைந்திருந்தன. குளிர்ந்த நிழல் தரும் செண்பக மரங்களும், அவற்றின் அடியில் அழகிய நீரோடையும் நிரம்பிய இடத்தில் ரிஷிகள் பலர் தவம் இருந்தார்கள். அந்த வனத்தில் சிவந்த கால்களும், வெண்ணிற சிறகுகளும் கொண்ட இளம்நாரை ஒன்று வசித்தது. முனிவர்களின் தவத்தாலோ, அல்லது அவர்கள் தமது சீடர்களுக்கு கூறும் அறிவுரைகளை மரத்தின் மீதிருந்து கேட்டதாலோ அந்த நாரையும் புலால் உண்ணுவதில்லை.

தவத்தில் சிறந்த முனிவர்கள் நீராடும் ஓடையில், அவர்களின் மேனி பட்டதால் புனிதமான தீர்த்தத்தில் வாழ்வதற்கு இந்த மீன்கள்தான் எவ்வளவு தவம் செய்திருக்க வேண்டும்! அந்த மீன்களை உண்டால் நமக்கு நரகம்தானே கிடைக்கும் என்று அந்த நாரை எண்ணியது. அதனால், புழுக்களையோ, மீன்களையோ அது உண்ணுவதில்லை. நீரையும், புற்களையும் உண்டு விரத வாழ்க்கை மேற்கொண்டது.

ஒருமுறை திருவாலவாய் எனப்படும் மதுரையில் வீற்றிருக்கும் சொக்கநாதரையும், மீனாட்சி அம்மனையும் பற்றி புராணங்களை முனிவர் ஒருவர் தமது சீடர்களுக்கு விளக்கினார். இதனைக் கேட்ட நாரை அந்தப் புண்ணியத் தலத்துக்கு தாமும் செல்ல வேண்டும் என எண்ணியது.

உடனே நீண்டு உயர்ந்த மாடங்கள் சூழ்ந்த மதுரைக்கு பறந்து வந்தது. நகரின் நடுவே யானைகள் தாங்கிய விமானத்தையும், பொற்றாமரைக் குளத்தையும் கண்டு அந்த நாரைக்கு மெய்சிலிர்த்தது. பொற்றாமரைக் குளத்தில் நீராடி சொக்கநாதரை தினமும் வழிபட்டது. அதன் பக்தியை சோதிக்க எண்ணி தனது திருவிளையாடலை அரங்கேற்றினார் சிவபெருமான்.

அம்மை மீனாட்சியுடன் சுந்தரேசப் பெருமான் விடை மீது அமர்ந்து அருளும் காட்சி...

வனத்தில் கிடைத்த உணவு நகருக்குள் கிடைக்காமல் பசியால் அந்த நாரை வாடியது. பொற்றாமரை நீரையாவது அருந்தலாம் என்று எண்ணி குளத்தின் கரைக்கு சென்றது. பொற்றாமரைக் குளத்தில் அழகிய மீன்கள் துள்ளி விளையாடுவதைக் கண்டு அந்த நாரைக்கு மனம் தடுமாறியது. அவற்றை உண்டு பசியாறலாமா? என்றும் சிந்தை செய்தது.

ஆயினும் தான் கொண்ட விரதத்தை எண்ணி பசியோடு அன்றைய இரவைக் கழித்தது. மறுநாள் அதிகாலையில் பொற்றாமரை குளத்தில் நீராடி, அதில் மலர்ந்திருந்த தாமரை மலர்களை தமது அலகால் கொய்து, ஈசனின் திருவடியில் சமர்ப்பித்தது. அதன் கண்களில் இருந்து கண்ணீர் சிந்தியது.

“இறைவா! உம்மைப் பற்றிய ஞானத்தைக் கொடுத்தீர். புலால் உண்ணுதல் என்ற கீழான புத்தியை நீக்கினீர். இப்போது மீண்டும் அதே கீழான புத்தியைக் கொடுத்து, எனது மனதை தடுமாற வைக்கலாமா? நீரே அடைக்கலம்” என்று சொக்கநாதரை பார்த்தபடி நின்றது.

மதுரை மீனாட்சி அம்மையுடன் சுந்தரேசப் பெருமான்

உடனே அம்மை மீனாட்சியுடன், இறைவன் விடை மீது அமர்ந்தபடி நாரையின் முன்பு தோன்றினார். “வேண்டிய வரங்களைக் கேள்” என்று இறைவன் கூறினார்.

மகிழ்ச்சியால் திளைத்த அந்த நாரை, “இறைவா! சிவலோகப் பதவியை எனக்கு அருள வேண்டும். மிகவும் புண்ணிய தீர்த்தமான உமது பொற்றாமரைக் குளத்தில் வாழும் மீன்களை என்னைப் போன்ற பறவையினங்கள் உண்ணுமாயின், அவற்றுக்கு பெரும் பாவம் வந்து சேரும். எனவே, நீர் வாழ் உயிரினங்கள் யாவும் பொற்றாமரைக் குளத்தில் இல்லாது போக வேண்டும்” என்று நாரை வேண்டிக் கொண்டது.

நாரையின் வார்த்தைகளால் மகிழ்ச்சியடைந்த ஈசனும், அம்பாளும் அப்படியே வரம் தந்தனர். துந்துபிகள் முழங்க தேவ விமானம் பறந்துவந்து நாரையை கைலாயத்துக்கு அழைத்துச் சென்றது.

நாரை வேண்டிக் கொண்டபடியே மதுரை பொற்றாமரைக் குளத்தில் மீன்களோ, வேறு நீர்வாழ் உயிரினங்களோ இதுவரை வசிப்பதில்லை.

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் நடைபெறும் ஆவணி மூலத் திருவிழாவில் நாரைக்கு முக்தி தரும் திருவிளையாடல் தரிசனத்தை கண்டு களிக்கலாம்.

20.8.2023 - நாரைக்கு முக்தி தரும் படலம்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் பொற்றாமரைக் குளம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE