மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் ஆவணி மூலத்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். மேலும் சித்திரைத் திருவிழாவில் மீனாட்சிக்கும், ஆவணி மூலத் திருவிழாவில் சுவாமிக்கும் பட்டாபிஷேக விழா நடைபெறும்.
சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் 12 திருவிளையாடல் லீலைகள் ஆவணி மூலத் திருவிழாவில் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழாவில் முதல் திருவிளையாடலாக கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை நடைபெறுவது வழக்கம்.
கருங்குருவிக்கு சிவபெருமான் என்ன உபதேசம் செய்தார்?
ராஜராஜனின் மகன் சுகுணபாண்டியன், தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு மதுரையில் மன்னராகப் பதவியேற்றார். அவரது ஆட்சிக்காலத்தில் கருங்குருவி ஒன்று மதுரை அருகில் வசித்தது. முற்பிறவியில் சிறந்த வீரனாகப் பிறந்த இந்தக் குருவி, தான் செய்த பாவ வினைகளால் இப்பிறவியில் குருவியாகப் பிறந்திருந்தது. பருந்துகளும், காகங்களும் அதனை எங்கும் அமர விடாமல், இரை தேட விடாமல் விரட்டி அடித்தன. அதன் வாழ்நாள் எல்லாம் பயந்து பயந்தே வாழ வேண்டியதாயிற்று. இதனால் அந்த ஊரை விட்டு வெளியேறி அருகிலுள்ள காட்டுக்குச் சென்றது. அங்கேயே மறைந்து வாழ்ந்தது.
ஒருமுறை அந்தக் காட்டின் வழியே பயணித்த சிவனடியார் ஒருவர் அந்தக் குருவி தங்கியிருந்த மரத்தின் அடியில் இளைப்பாறினார். அவ்வழியே வந்தவர்கள் அவரிடம் ஆசி பெற்றுச் சென்றனர். அப்போது அங்கு வந்த ஒருவரிடம், அந்த சிவனடியார் மதுரை நகரின் பெருமைகளை எடுத்துக் கூறி, அங்குள்ள மீனாட்சி அம்மன் கோயிலின் பொற்றாமரைக் குளத்தின் தீர்த்தம் நமது உடலில் பட்டாலே போதும். நமக்கு மோட்சம் உறுதி என்று அருள்வாக்கு கூறினார்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்தக் கருங்குருவி உடனே மதுரை நோக்கி பறந்தது. கோயில் பொற்றாமரை குளத்தில் நீராடி, அம்மன் சன்னதியிலும், சுந்தரேஸ்வரர் சன்னதியிலும் உத்திரத்தில் அமர்ந்தபடி சுவாமி தரிசனம் செய்தது. தினமும் பொற்றாமரை குளத்தில் நீராடுவதும், சுவாமி தரிசனம் செய்வதுமாக அந்தக் குருவிக்கு காலம் கழிந்தது.
இதைக் கண்ட மீனாட்சி அம்மன், தனது நாதனிடம் இதுபற்றி விசாரித்தாள். சுவாமியும், அந்தக் குருவியின் பூர்வ ஜென்மம் குறித்து விளக்கினார். குருவியின் மீது இரக்கம் கொண்ட அன்னை மீனாட்சி, அதற்கு ஏதாவது உதவுமாறு சுவாமியிடம் வேண்டினாள். சுவாமியும் அதனையேற்று, அந்தக் கருங்குருவியை தன் கையில் தூக்கிக் கொண்டார்.
இறைவனைக் கண்ட ஆனந்தத்தில் அந்தக் குருவி, “சுவாமி வலிமைமிக்க மற்ற பறவைகள் என்னைத் துன்புறுத்துகின்றன” என்று கண்ணீர் விட்டது.
சுவாமியும் அந்தக் குருவிக்கு ஆயுள் விருத்தியும், பிறவித் துன்பங்கள் நிவர்த்தியும் உண்டாக்கும் மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார். “இனி உன் வலிமை அதிகமாகும். மற்ற பறவைகள் உன்னைத் துன்புறுத்தாது” என்று அருளாசி வழங்கினார்.
அது முதல் வலியன் என்று அந்தக் கருங்குருவிக்கு பெயர் அமைந்தது. சுவாமி உபதேசித்த மந்திரத்தை உச்சாடனம் செய்தபடியே வாழ்நாளைக் கழித்து இறையடி சேர்ந்தது.
மிருத்யுஞ்சய மந்திரம் என்றால் என்ன?
சிவனுக்குரிய மிக முக்கியமான மந்திரம் மகா மிருத்யுஞ்சய மந்திரம் ஆகும். இதற்கு திரியம்பக மந்திரம் என்றும் பெயர் உண்டு. மார்க்கண்டேயரைப் போல் சாகா வரம் அருளும்படி சிவனிடம் வேண்டி, இரு வரிகள் கொண்ட இந்த மந்திரத்தையே உச்சாடனம் செய்தார். சிரஞ்சீவியாக வாழ்கிறார். காயத்ரி மந்திரத்திற்கு அடுத்தபடியாக மிக பழமையான மந்திரமாக கருதப்படும் இந்த மந்திரம், ரிக் மற்றும் யஜூர் வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சக்தி வாய்ந்த மிருத்யுஞ்சய மந்திரம்:
"ஓம் த்ரியம்பகம் யஜாமஹே ஸூகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்"
பொருள்:
இயற்கையாகவே நறுமணத்தை கொண்டவரும், அடியவர்களுக்கு கருணையை அருள்பவருமான முக்கண் கொண்ட எங்கள் பெருமானே உங்களை பூஜித்து வழிபடுகிறோம். பழங்கள் எப்படி மரத்தில் இருந்து விடுபடுகின்றனவோ அதே போல் மரணத்தின் பிடியில் இருந்து என்னை விடுவித்து, ஆன்மிக வழியில் இருந்து மனம் தடுமாறாமல் நான் வாழ அருள் செய்ய வேண்டுகிறேன்.
சிவ பெருமானுக்கு மிருத்யுஞ்சயன் என்ற திருநாமமும் உண்டு. இவரே மரணத்தில் இருந்து விடுவிப்பவராகவும் உள்ளார். நீண்ட வாழ்வளிக்கும் மிக சக்தி வாய்ந்த மந்திரமாக மகாமிருத்யுஞ்சய மந்திரம் உள்ளது. இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் ஆரோக்கியம் மேம்படும். தீய சக்திகளின் பிடியில் இருந்து வெளியே வரவும், மரண பயம் இன்றி வாழவும், கிரகங்களின் தீய பாதிப்புக்களில் இருந்து மீளவும் மிருத்யுஞ்சய மந்திரம் துணை நிற்கிறது.
19.8.2023 - கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை.