சிலிர்க்க வைக்கும் சிவன்மலை... சுப்பிரமணிய சுவாமியால் உத்தரவு பெட்டியில் பசு, கன்று சிலை!

By காமதேனு

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயில் பிரசித்தி பெற்றதாகும். வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பாக இங்கு ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது.

சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோயிலில் உள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். அந்த உத்தரவுப்படியே பக்தர்கள் அந்த பொருளைக் கொண்டு வந்து வைத்து வழிபடுவது வழக்கம்.

இந்நிலையில், சென்னை பட்டவாக்கத்தைச் சேர்ந்த முரளிதரன் என்ற பக்தரின் கனவில் வந்த சுப்பிரமணியசுவாமி, பசுடன் கன்றுக்குட்டி இருப்பது போன்ற சிலை ஒன்றை வைத்து வழிபட உணர்த்தியுள்ளார். இதனையடுத்து, மண்ணால் செய்யப்பட்ட பசுவுடன் கன்றுக்குட்டி இருக்கும் சிலை ஒன்று நேற்று முதல் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்டு-1-ம் தேதி முதல் விருஷ்ப அஸ்திரம், தனூர்பாண அஸ்திரம், வருண அஸ்திரம், பாசுபத அஸ்திரம், ரூபாய் 101, 6-எலுமிச்சை பழங்கள் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.

புதிய உத்தரவு பொருள் கொண்டு வந்து வைத்த பக்தர் முரளிதரன், கடந்த ஆடி 18-ம் தேதி எனது கனவில் ஒரு பெட்டியின் அருகில் தனது நண்பர்களும் நின்று கொண்டிருப்பதை போலவும், அந்த பெட்டியில் ஒரு சீட்டு இருப்பது போலவும், பெட்டியைத் திறந்து சீட்டை எடுத்து படிக்கும் போது அதில் பசுவுடன் கன்றுக்குட்டி இருக்கும் விதமாக அதில் எழுதப்பட்டிருந்தது போல் கடவுள் உணர்த்தினார்.

இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் தேடி பார்க்கும் போது காங்கேயம் அருகே சிவன்மலை முருகன் கோயிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பொட்டி பற்றியும், அதில் வைக்கும் பொருள் பற்றியும் தெரியவந்தது. இதையடுத்து கோயிலுக்கு நேற்று வந்து சாமியிடம் பூப்போட்டு கேட்டு உத்தரவான பின் பசு, கன்றுக்குட்டி சிலை வைத்ததாக கூறினார்.

இதுகுறித்து அறிந்த அப்பகுதி பக்தர்கள் திரளானோர் வந்து சுவாமி தரிசனம் செய்து, பசுவுடன் கன்று உள்ள சிலையையும் வழிபட்டுச் செல்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE