லிங்கமே அர்த்தநாரியாக காட்சி தரும் கொல்லூர்

By மு.இசக்கியப்பன்

சுயம்புவாகத் தோன்றிய ஜோதிர்லிங்கம் ஒரு தங்க ரேகையால் சக்தியாகவும், சிவனாகவும் பிரிந்து காட்சி தரும் அழகை கொல்லூரில் தரிசிக்கலாம்.

கர்நாடக மாநிலத்தின் தெற்கே, குடசாத்ரி மலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ அமைந்திருப்பது கொல்லூர் மூகாம்பிகை கோயில். மங்களூருவில் இருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் சௌபர்ணிகையாற்றின் கரையோரமாக இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. சக்தி பீடங்களில் ஒன்றாகிய கொல்லூர், அம்பிகையின் காதுகள் விழுந்த பீடமாகப் போற்றப்படுகிறது.

ஆரண்யபுரம் என்ற பெயரில் அடர்த்தியான வனமாக இந்தப் பகுதி இருந்தபோது கோல மகரிஷி இங்கு தவமியற்றி வந்தார். அவரின் தவத்தைக் கலைக்க வந்த கம்காசுரனை அழிப்பதற்காக ஈசன், கணபதி, வீரபத்திரர் ஆகியோருடன் தோன்றிய தேவி, கம்காசுரனை வாய் பேசமுடியாத ஊமையாக மாற்றிவிட்டாள். அதன்பிறகும் அவனுடைய அட்டகாசங்கள் அதிகரிக்கவே, அவனை வதம் செய்த அம்பிகை, மூகாம்பிகை என்னும் திருப்பெயருடன் இங்கு கோயில் கொண்டாள். கோல மகரிஷி தவம் இயற்றிய அந்தப் பகுதி கோலாபுரம் என்று அழைக்கப்பட்டு, தற்போது கொல்லூர் என்று அழைக்கப்படுகிறது.

ஆதிசங்கரர் கொல்லூரில் தவமிருந்தபோது, அன்னை மூகாம்பிகை காட்சியளித்து, கோல மகரிஷிக்காக உருவான சுயம்புலிங்கத்தின் முன்பு தனக்கும் சிலை அமைத்துக் கோயில் உருவாக்க ஆணையிட்டாள். தேவியின் ஆணைப்படி, ஆதி சங்கரர் பஞ்சலோகங்களால் ஆன மூகாம்பிகை சிலையை அங்கே பிரதிஷ்டை செய்தார். ஸ்ரீசக்கரம் மற்றும் ஆலயத்தின் அத்தனை விதிகளையும் அவரே இயற்றிக் கொடுத்தார்.

மூகாம்பிகை அன்னை, ஆதிசங்கரருக்குக் காட்சி தந்த பிறகுதான் அவர் ‘சௌந்தர்ய லஹரி’ எனும் பாடல்களை இயற்றினாராம். ஆதிசங்கரர் அமர்ந்த பீடம் இன்றும் கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் உள்ளது.

கொல்லூர் மூகாம்பிகை கோயில்

சௌபர்ணிகை ஆற்றில் இருந்து மூகாம்பிகை அம்மனின் கோயிலுக்குச் செல்லும் வழியில், பழைமையான காளி கோயிலும், அதனுள் பிரம்மாண்ட புற்றும் உள்ளது. இதையும், காளிதேவியையும் வணங்கி, மூகாம்பிகை அன்னையின் கோயிலை அடையலாம்.

கொல்லூர் மூகாம்பிகை அம்பாள் மூன்று கண்கள், நான்கு கரங்கள், அந்தக் கரங்களில் சங்கு, சக்கரம் தாங்கியவளாய், அபய, வர முத்திரைகளைக் காட்டி ஆதிசக்தி மூகாம்பிகை அருள்பாலிக்கிறார்.

கருவறையில் உள்ளே, சக்திதேவி மூகாம்பிகை சிலையின் முன்னர் காணப்படும் சுயம்பு லிங்கமாகிய ஜோதிர்லிங்கம், சக்தியும், சிவனும் இணைந்திருப்பதை உணர்த்துகிறது. இந்த லிங்கம் ஒரு தங்க ரேகையால் இரு பிரிவுகளாகப் பிரிந்து, சக்தி – சிவன் தத்துவத்தை உணர்த்துகிறது. உச்சி வேளையின்போது, சூரியனின் ஒளிக்கதிர்கள் இந்த லிங்கத்தின் மீது பட்டு தகதகக்கும்போது கண்கொள்ளா காட்சியாக விளங்குகிறது.

பிரம்மாண்ட வடிவில் காணப்படும் இந்த ஆலயம் எப்போதும் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியக்கூடியது. இந்த ஆலயத்தின் கருவறை விமானம் முழுவதும் தங்கத் தகடுகளால் இழைக்கப்பட்டு பொன் மயமாகக் காட்சியளிக்கிறது.

ஆணவமிக்க மூகாசுரனை வதைத்து, கோலமகரிஷியை காத்து அருள் செய்த அன்னை மூகாம்பிகை கருணையே வடிவானவள். காலத்தை கடந்த மஹா வரப்பிரசாதி. இவளை வணங்கித் தொடங்கும் எந்தச் செயலும் தடையின்றி நிறைவேறும்.

கொல்லூர் மூகாம்பிகை கோயில்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE