மதுரை அரசாளும் மரகதவல்லி மீனாட்சி

By மு.இசக்கியப்பன்

சிவபெருமானின் பஞ்ச நடனத் திருத்தலங்களில் வெள்ளியம்பலமான மதுரையில் மீனாட்சி அம்மன் சமேதராக சுந்தரேஸ்வர பெருமான் வீற்றிருக்கிறார். பாடல்பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் முக்கியமானது இக்கோயில். மீனாட்சி அம்மன் ராணியாக இருந்து அரசாட்சி செய்த நகரம் மதுரை. இங்கு இப்போதும் பட்டத்து ராணியாக அன்னை மீனாட்சி கொலுவீற்றிருக்கிறாள்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில்

மலையத்வஜ மன்னன் - காஞ்சனமாலை தம்பதியர் பிள்ளை வரம் வேண்டி நிகழ்த்திய வேள்வியில் அவதரித்தவள் மீனாட்சி அம்மன். நாட்டை வழிநடத்தும் இளவரசனுக்குரிய அனைத்து போர்ப்பயிற்சிகளும், நிர்வாகப் பயிற்சிகளும் பெற்றாள் அன்னை மீனாட்சி. பல்வேறு போர்களிலும் பங்கேற்று நீதியை நிலைநாட்டினாள். தனது மகளுக்கு அரசாட்சியை மலையத்வஜ ராஜன் அளிக்க மதுரை ராணியாக அன்னை பதவியேற்றாள். வடதிசைக்கு போருக்கு எழும்போது, சிவபெருமானை சந்தித்ததும், அவரையே மணம்புரிந்தார்.

அதுமுதல், சித்திரை மாதம் முதல் ஆடி மாதம் வரை நான்கு மாதங்களுக்கு மதுரையின் பட்டத்து ராணியாக மீனாட்சி அம்மன் ஆட்சி நடைபெறுகிறது. ஆவணி மாதம் முதல் பங்குனி வரையான 8 மாதங்களுக்கு சுந்தரேஸ்வரர் பெருமான் ஆட்சி நடைபெறும்.

மதுரை மீனாட்சியம்மன் சுவாமி சுந்தரேஸ்வர பெருமானுடன்...

இதனைக் குறிக்கும் வகையில் சித்திரை திருவிழாவின் 8-ம் நாளில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் கோலாலகமாக நடைபெறும். அப்போது அம்மன் சன்னதியிலுள்ள 6 கால் பீடத்தில் மீனாட்சி அம்மனுக்கு ராயர் கிரீடம் சாற்றி, ரத்தினங்கள் இழைத்த செங்கோலை வழங்கி பட்டாபிஷேகம் நடைபெறும். இதுபோல் ஆவணி மாதம் 12 நாட்கள் நடைபெறும் மூலத் திருவிழாவில் சுந்தரேஸ்வர பெருமானுக்கு பட்டாபிஷேக விழாவும், சிவபெருமானின் 12 திருவிளையாடல்களை அரங்கேற்றும் வைபவமும் நடைபெறும்.

மதுரையில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். கர்ப்பகிரகத்தில் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருக்கும் அன்னையின் விக்ரகம் மரகதக்கல்லினால் ஆனது. இதனால் இவளுக்கு மரகதவல்லி என்றும் பெயர் உண்டு. வலது காலை சற்று முன் வைத்து, இடை சற்றே வளைய காட்சிதருகிறாள் அன்னை மீனாட்சி. மனோன்மணி என்றும், அங்கையற்கண்ணி என்றும் அழைக்கப்படுகிறாள்.

மரகதவல்லியாக அருளும் மதுரை மீனாட்சி

மீன்கள் தன் கண்களாலேயே தன் குஞ்சுகளைக் காப்பது போல், கண்ணுக்கு ஓய்வளிக்காமல் தன் பக்தர்களைக் காப்பவள் என்ற பொருள்படவே மீனாட்சி என்று அழைக்கப்படுகிறாள். அன்னைக்கு இடப்பக்கத்தில், சுந்தரேஸ்வரர் சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார். சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதால் அம்மனின் இடப்பாகத்தில் இறைவன் அருள்புரிகிறார்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தேரோட்டம்

VIEW COMMENTS