பக்தர்களின் அறியாமையை போக்கும் திருக்காளத்தி ஞானப்பிரசுன்னாம்பிகை

By மு.இசக்கியப்பன்

தெற்கு கைலாயம் எனப்படும் திருக்காளத்தி பஞ்சபூத தலங்களில் வாயுத்தலமாக விளங்குகிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் சுவர்ணமுகி எனப்படும் பொன்முகலி ஆறு வடக்கு நோக்கி உத்தரவாகிணியாக பாயும் இடத்தில் திருக்காளத்தி நாதர் கோயில் கொண்டுள்ளார். யானை, பாம்பு, சிலந்தி ஆகிய மூன்றும் தவமிருந்த வீடுபேறு பெற்ற தலம் இது.

காளஹஸ்தி - திருக்காளத்தி நாதர் கோயில்

சுயம்பு லிங்கமான மூலவருக்கு ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர், குடுமித்தேவர் என பெயர்கள் உண்டு. அம்பாள் ஞானப்பிரசுன்னாம்பிகை என்றும், ஞானப் பூங்கோதை என்றும் அழைக்கப்படுகிறாள். தலமரம் - மகிழம். திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல்பெற்ற தலம். திருக்கண்ணப்ப நாயனாரின் பக்தியை உலகறியச் செய்த தலம் இது.

தொண்டை மண்டல மன்னர்கள், குலோத்துங்க சோழன், ஸ்ரீகிருஷ்ண தேவராயர் தொடங்கி சமீபகாலத்தில் காரைக்குடி நகரத்தார்கள் வரை திருப்பணிகள் செய்யப்பட்ட கோயில் இது. அம்பாள் ஞானப்பூங்கோதையின் சன்னதி கிழக்கு நோக்கி இருக்கிறது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறாள். ஆதிசங்கரர் பல்வேறு சக்தி பீடங்களில் பல்வேறு சக்கரங்களை பிரதிஷ்டை செய்துள்ளார். திருக்காளத்தி ஞானபிரசுன்னாம்பிகை சன்னதியில் 'அர்த்தமேரு'வை பிரதிஷ்டை செய்திருக்கிறார். சக்தி பீடங்களில் அன்னை ஞானப்பிரசுன்னாம்பிகை சன்னதி ஞான பீடமாகப் போற்றப்படுகிறது.

காளத்திநாதர், குடுமித்தேவர் எனும் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர்

ஞானப்பிரசுன்னாம்பிகை எனும் ஞானப் பூங்கோதை அம்பாள்

வெள்ளிக்கிழமைகளில் மூலஸ்தானத்தில் அம்பாளுக்கு தங்கப்பாவாடை சார்த்தப்படுவதும், ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவதும் வழக்கம். அம்பாள் கருவறையின் இடதுபுறம் 'மிருத்யுஞ்சலிங்க' சன்னதியும், வலதுபுறம் தலமரமான மகிழ மரமும் உள்ளன. அதுபோல் அம்பாள் சன்னதி பிரகாரத்தில் மூன்று தலைகள் சேர்ந்திருப்பது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இதன் அடியில் சக்தி வாய்ந்த விசுக்தி சக்கரம் இருப்பதால் பலரும் இங்கு தியானத்தில் அமர்ந்திருப்பதைக் காணலாம்.

சிவயோக நெறியில் பலவிதமான சக்கரங்கள் கூறப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு சக்கரமும் ஒவ்வொரு திருத்தலங்களில் உள்ளன. இதில் விசுக்தி சக்கரம் உள்ள தலம் திருக்காளத்தி ஆகும். விசுக்தி சக்கரம் அமைந்துள்ள திருக்காளத்தி அன்னை ஞானப்பிரசுன்னாம்பிகை தனது பக்தர்களின் அறியாமையைப் போக்குபவளாக, ரோஜா நிறம் கொண்டவளாக, அம்ருதா முதலான 16 சக்திகளைத் தன் தேவதைகளாகக் கொண்டவளாக, பாயச அன்னத்தை விரும்பி ஏற்பவளாக இருக்கிறாள். இவள் உயிரினங்களின் உடலில் தோல் பாகத்தில் உறைகிறாள் என்று லலிதா சகஸ்ரநாமம் கூறுகிறது. காலை நடைதிறந்தால் இரவு வரை இக்கோயில் திறந்தே இருக்கும். இதனால் மதியமும் தரிசனம் செய்யலாம்.

காளஹஸ்தி - திருக்காளத்தி நாதர் கோயில் தேரோட்டம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE