திருத்தணி முருகன் கோயில் தெப்பத் திருவிழா... ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

By காமதேனு

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழ்வது அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு நேற்று இரவு இரண்டாவது நாள் தெப்ப திருவிழா நடைபெற்றது.

இதற்காக காவடி மண்டபத்தில் இருந்து வெளியே வந்த வள்ளி, தெய்வானை முருகப்பெருமான் முதலில் தேர்வீதியில் வலம் வந்தனர். தொடர்ந்து, படிக்கட்டுகள் வழியாக மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை குளத்திற்கு ஊர்வலமாக சுவாமி எடுத்து செல்லப்பட்டு சரவணப்பொய்கையில் உள்ள அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

இரண்டாம் நாளான நேற்று தெப்பம் ஐந்து முறை சரவணப் பொய்கை குளத்தை சுற்றி வந்தது. அப்போது வீரமணி பக்தி இன்னிசை கச்சேரி நடைபெற்றது. மற்றும் மெல்லிசை குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த தெப்பத் திருவிழாவை பக்தர்கள் குளத்தின் நான்கு பக்கப் படிகளிலும் அமர்ந்து அரோகரா அரோகரா என்று பக்தி முழங்க விண்ணைப் பிளக்க கோஷம் எழுப்பி, தெப்பம் வரும்போது கற்பூரம் ஏற்றி சுவாமியை தரிசனம் செய்தனர். இந்த தெப்ப திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை தரிசித்தனர்.

VIEW COMMENTS