அவிநாசி அருகே 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தளிகீஸ்வரர் கோயிலில் புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

By எம்.நாகராஜன்

உடுமலை: அவிநாசி அருகே சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தளிகீஸ்வரர் கோயிலில் 9 புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பழமை வாய்ந்த கோயில்கள், முன்னர் வழிபாட்டு மையங்களாகவும், மக்கள் சமுதாயத்தின் நிர்வாக அமைப்பாகவும் திகழ்ந்தன. இக்கோயில்கள்தான் பண்டைய கருவூலம், ஆவணக்களஞ்சியம், கல்வி மற்றும் மருத்துவ, தானியக்கிடங்கு, அன்னசத்திரம், ஆயுதம் மற்றும் பயிற்சிக்கூடங்கள் என சமுதாயத்தின் உள்கட்டமைப்பாகவும் திகழ்ந்ததாக பல்வேறு சான்றுகள் மூலமாக தெரிய வருகிறது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த கோயில்பாளையம் கிராமத்திலுள்ள தளிகீஸ்வரர் கோயிலில், சமீபத்தில் கல்வெட்டு குறித்த ஆய்வு நடைபெற்றது.

இதுதொடர்பாக திருப்பூர் வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த நிர்வாகி சு.ரவிக்குமார் கூறியதாவது: "தமிழகத்தை பொறுத்தவரை கி.பி.5-ம் நூற்றாண்டு முதல் குடவரை கோயில்களும், கி.பி.7-ம் நூற்றாண்டு முதல் ஒற்றை கற்கோயில்களும், கி.பி.8-ம் நூற்றாண்டு முதல் கற்றளிகளும் (கட்டுமானக் கோயில்கள்) கட்டப்பட்டன. கொங்கு மண்டலத்தில் கி.பி.9-ம் நூற்றாண்டில்தான் முதன் முதலாக கற்றளிகள் அமைக்கப்பட்டன.

இவ்வாறு கொங்கு மண்டலத்தின் தொடக்க கால கற்றளிகளில் ஒன்றாகவும், மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் அந்த கற்றளியின் பெயரிலேயே கோயில்பாளையம்புதூரில் தளிகீஸ்வரர் என அழைக்கப்படும் கோயில் உள்ளது. இக்கோயிலில் நடைபெற்ற ஆய்வின்போது, புதிதாக ஒரு வட்டெழுத்து, எட்டு தமிழ் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சுமார் 1100 ஆண்டுகள் பழமையான இக்கோயில், வட்டெழுத்து கல்வெட்டுகளை கொண்டுள்ளது. வட்டெழுத்து என்பது இன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் தமிழ் எழுத்துகளுக்கு முன்பு கி.பி.5-ம் நூற்றாண்டு முதல் கி.பி.11-ம் நூற்றாண்டு வரை வழக்கில் இருந்த தமிழ் எழுத்து வடிவம் ஆகும்.

தளிகீஸ்வரர் கோயிலின் அர்த்த மண்டபம் முன்பக்க வலது சுவரில் 12 வரிகள் கொண்ட வட்டெழுத்துகளை இந்திய வரலாற்று பேராசிரியர் முனைவர் எ.சுப்பராயலு வாசித்துள்ளார். இக்கல்வெட்டு கி.பி.9-ம் நூற்றாண்டில் கொங்கு மண்டலத்தின் மத்திய பகுதிகளை ஆட்சி செய்த இடைக்கால சேரர் மரபில் வந்த கோக்கண்ட வீரநாராயணன் கல்வெட்டு என்றும், இதில் ‘ஸ்வஸ்தி கோக்கண்டன் வீரநாரணற்குச் செல்லா நின்ற வாண்ட .... பனணவ ..... கீருடப்பாழ’ என வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னால் ஏற்படுத்தப்பட்ட இக்கோயிலுக்கு சேதம் ஏற்படுத்துபவர்களின் சன்னதி பாழ்படும் என்பது இதன் பொருளாகும்.

இது, கொங்கு சோழ மாமன்னன் வீரராசேந்திரன் (கி.பி.1207-1256) காலத்து கல்வெட்டாகும். அதற்கு அடுத்த நிலையில் அவருடைய பேரன் விக்கிரம சோழன் (கி.பி.1273-1305) காலத்தை சேர்ந்த கல்வெட்டுகள்தான் அதிகமாக காணப்படுகின்றன.

இந்த கல்வெட்டுகள் மூலமாக, இவ்வூர் பண்டைய கொங்கு 24 நாடுகளில் பொங்கலூர்க்கா நாட்டுப் பிரிவில் இருந்துள்ளதும், ஒரு பெண் கோயிலில் நந்தா விளக்கு எரிப்பதற்கு கோயில் கருவூலமான பண்டாரத்துக்கு கொடுத்தது போன்ற செய்தியையும் அறிய முடிகிறது. எழுத்துகள் பொரிந்துள்ளதால் முழுமையான செய்தியை அறிய முடியவில்லை.

இக்கோயில் அருகிலேயே 1000 ஆண்டுகள் பழமையான பண்டைய வணிகர்கள் வழிபட்ட அய்யனார் சிற்பமும் உள்ளது. அதேபோல், இவ்வூரில் கல்வட்டத்துடன் கூடிய பண்டைய பெருங்கற்காலச் சின்னங்களும், அலை கோடுகளுடன் கூடிய ஒடுகளும், தாங்கிகளும், இரும்பு கசடுகளும் காணப்படுகின்றன. இதுகுறித்து தமிழக தொல்லியல் துறையினர் முறையாக ஆய்வு செய்து, இக்கோயிலை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE