அரியலூர் கோதண்ட ராமசாமி கோயிலில் வைகாசி மாதம் தேரோட்டம்: அமைச்சர் தகவல்

By பெ.பாரதி

அரியலூர்: அரியலூரில் பிரசித்தி பெற்ற கோதண்ட ராமசாமி கோயிலில் 88 ஆண்டுகளுக்கு பிறகு வைகாசி மாதம் தேர்த் திருவிழா நடைபெறும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.

அரியலூர் நகரில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற கோதண்ட ராமசாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான தேர் சேதமடைந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் ரூ.17 லட்சம் பங்களிப்புடன் ரூ.29 லட்சம் மதிப்பில் புதிய தேர் செய்யும் பணி நடைபெற்று வந்த நிலையில், தற்போது பணி முழுவதுமாக நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், அந்த தேரை நிலை நிறுத்துவதற்கான இடத்தை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று (செப்.09) காலை பார்வையிட்டார். அப்போது, அரியலூர் நகரில் உள்ள தேரடி பகுதியில் தேர் நிறுத்துவதற்கான இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அந்த இடத்தில் உள்ள மின்சாரத்துறைக்கு சொந்தமான டிரான்ஸ்பார்மரை அருகேயுள்ள மங்காய் பிள்ளையார் கோயில் பின் பகுதியில் மாற்றி அமைக்கும் வகையில் அந்த இடத்தினையும் அமைச்சர் பார்வையிட்டார்.

தொடர்ந்து, கோதண்ட ராமசாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் சிவசங்கர், தேரினை பார்வையிட்டார். அப்போது, வரும் வைகாசி மாதம் தேர் திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஆய்வின் போது, இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், மின்சார வாரிய அதிகாரிகள், நகராட்சி நிர்வாகத்தினர், நகர்மன்றத் தலைவர் சாந்தி உட்பட பலரும் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE