உதகையில் சிவசேனா, விஹெச்பி சார்பில் 92 விநாயகர் சிலைகள் கரைப்பு

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை: உதகையில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட 92 விநாயகர் சிலைகள் காமராஜ் அணையில் கரைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்து முன்னணி, சிவசேனா, விஸ்வ இந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி சார்பில் சுமார் 525 விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டன. அங்கு பக்தர்கள் வழிபாடு நடத்தி, தரிசனம் செய்தனர். பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில், இன்று உதகையில் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. உதகை காந்தல் பகுதியில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. அங்கிருந்து சிலைகள் சேரிங்கிராஸ் கொண்டு வரப்பட்டன. சிவசேனா சார்பில் 15 சிலைகளும், விஷ்வ இந்து பரிஷத் சார்பில் 77 சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.

சிவசேனா ஊர்வலத்துக்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். விஷ்வ இந்து பரிஷத் ஊர்வலத்துக்கு மாவட்ட தலைவர் ரெக்ஸ் மணி, மாநில துணை தலைவர் உதயகுமார் தலைமை வகித்தனர். பிரதிஷ்டை செய்யப்பட்ட 92 சிலைகள் ஜீப், லாரிகளில் வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

மேளதாளம் முழங்க வாகனங்களில் விநாயகர் சிலைகள் சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, காபிஹவுஸ் ரவுண்டானா, மார்க்கெட், மெயின் பஜார், மின்வாரிய ரவுண்டானா வரை ஊர்வலம் நடந்தது.

காவல்துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புடன் உதகை அருகே காமராஜ் அணைக்கு சிலைகள் கொண்டு செல்லப்பட்டன. மேலும் துப்பாக்கி ஏந்திய சிறப்பு படை போலீஸார் உள்ளிட்டவையும் இருந்தது.

இதைத்தொடர்ந்து காமராஜர் அணைக்கு கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் படகு மூலம் அணையில் கரைக்கப்பட்டன. வீடுகளில் வைக்கப்பட்ட சிலைகளும் கரைக்கப்பட்டன. உதகையில் விசர்ஜன ஊர்வலம் நடந்ததால், முக்கிய வீதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. வரும் 11ம் தேதி இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE