விநாயகர் சதுர்த்தி | பால்குடம், முளைப்பாரி எடுத்து பக்தர்கள் ஊர்வலம் @ கோவில்பட்டி

By சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: கோவில்பட்டியில் உள்ள சக்தி விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவில் பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

கோவில்பட்டி புதுக்கிராமம் ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா இன்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு விநாயகர் பூஜை, மகா சங்கல்பம், புண்யாக வாகனம், கும்ப பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது.

தொடர்ந்து காலை 9.30 மணியளவில் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து விரதமிருந்து காப்பு கட்டிய பக்தர்கள் 500க்கும் மேற்பட்டோர் பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தில் பள்ளி மாணவ மாணவிகளின் கோலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்டவைகள் இடம் பெற்றன. மேலும், சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ளிட்ட தெய்வங்களின் வேடமடைந்து மாணவ மாணவிகள் வந்தனர்.

ஊர்வலம் பிரதான சாலை புதுக்கிராமம் சாலை வழியாக சக்தி விநாயகர் கோயிலை அடைந்தது. அங்கு சக்தி விநாயகருக்கு பால் அபிஷேகம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, அலங்காரம் மற்றும் மகா தீபாரதனை நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE