கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தில் உள்ள ஆதிசக்தி ஞானபீட கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தை முழுவதும் பெண்களே நடத்தி வைத்தனர்.
திருபுவனம் இந்திரா நகரில் உள்ள ஆசீவகத் தமிழ்ச் சித்தர் வழிபாட்டு மையம் மற்றும் சித்தவித்தை ஞான பீடத்தில் உள்ள ஆதிசக்தி ஞானபீடம் மற்றும் பதினெண் சித்தர்கள், விநாயகர், முருகன், வாலைக்குமாரி, ஸ்ரீலஸ்ரீமூட்டை சுவாமிகள் அருள்கூடம் ஆகிய சந்நிதிகள் உள்ளன. இவற்றின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
ஆதிசக்தி ஞானபீடம், சந்நிதிகளின் கோபுர கலசங்களில் பச்சை ஆடை உடுத்திய 60 பெண்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து, சுவாமிகளின் திருமேனிகளுக்கு அபிஷேகம் செய்தனர். கும்பாபிஷேகம் நிறைவடைந்த உடன், அனைவரும் கருவறைக்குள் சென்று வழிபட்டனர். இதையொட்டி, கடந்த 4-ம் தேதி மாலை யாக சாலை பூஜைகள் தொடங்கின.
இதற்காக சித்தர்கள் போற்றும் பஞ்சபூதங்களை குறிக்கும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் வடிவங்களில் வேள்வி குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 4 கால யாக சாலை பூஜைகளும் தமிழில் நடைபெற்றன. யாக சாலை பூஜைகள் முதல் கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றுவது வரை அனைத்து பணிகளையும் பெண்களே மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
» “தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல்; மத்திய மாநில அரசுகள் பாராமுகம்” - இபிஎஸ் சாடல்