விநாயகர் தோன்றிய கதை நமக்கெல்லாம் தெரியும். கயிலாயத்தில் பார்வதி தேவி குளிக்கச் சென்றபோது, அரைத்த மஞ்சளில் உருவம் செய்து, கணேசனுக்கு உருவம் கொடுத்து தன் காவலுக்கு நிற்கச் சொன்னார். இந்நிலையில், அங்கு வந்த சிவபெருமானையும் சிறுவன் கணேசன் தடுத்துவிட்டான். கோபமுற்ற சிவபெருமான், அவன் தலையைத் துண்டித்தார்.
பின்னர், பார்வதியின் மைந்தன் என்பதை அறிந்த சிவபெருமான், தனது பூதகணங்களை அழைத்து யானையின் தலையைத் துண்டித்து, அந்தச் சிறுவனுக்குத் தலையாக வைத்து கணபதி ஆக்கினார். பூதகணங்களுக்கெல்லாம் அதிபதியாகவும் முதல் கடவுளாகவும் இப்படித்தான் ஆனார் கணபதி.
பார்வதி மஞ்சளில் ஏன் பிள்ளையாரை உருவாக்கினார்?
மஞ்சள் குண்டலினி உறையும் இடத்தோடு தொடர்புள்ள நிறம். வள்ளலாரின் சன்மார்க்கக் கொடியும், மஞ்சளும் வெள்ளையும் கொண்டதுதான். நாபி முதல் புருவமத்தி ஈறாக உள்ள கொடிதான் புறத்தில் காட்டப்பட்டுள்ளது. அந்தக் கொடியின் மேற்புறம் மஞ்சள் என்றும் அடிப்பாகம் வெள்ளையென்றும் விளக்கம் சொல்லியுள்ளார் வள்ளலார்.
உலகின் பிரதிநிதி தேவி
இந்த உலகத்தைக் காக்கும் சிவன், வருகை தரும்போது சிறுவன் கணேசனால் அடையாளம் காண முடியவில்லை. கணேசன் அகந்தை உள்ள ஜீவனாய் அடையாளப்படுத்தப்படு கிறார். அகந்தையால் கடவுளை ஒரு போதும் அடையாளம் காண முடியாது. அகந்தையை அழிக்க குருவாக மாறிய சிவன், அகந்தை உறைந்திருக்கும் தலையைத் துண்டிக்க வேண்டியிருந்தது.
சிறுவன் கணேசனின் மரணத்தை அறிந்து வெளியே வந்த தேவி, மொத்தப் படைப்புகளையும் அழித்துவிடுவேன் என்று சிவனை மிரட்டினார். அகந்தையென்னும் உடல் அழியும்போது விடுதலையடையும் ஜீவன் பிரம்மத்துடன் இணைகிறது. அப்போது அகந்தையால் உருவாக்கப்பட்ட இந்த உலகம் அழிந்துவிடுகிறது. அந்த உலகின் பிரதிநிதியாக தேவி இங்கே சுட்டிக்காட்டப்படுகிறார்.
சிவன் கணேசனுக்கு யானையின் தலையை வைத்து உயிர் கொடுப்பது நமது சிறிய அகந்தையிலிருந்து நம்மைப் பிரித்துப் பேரிருப்பான பிரம்மத்துடன் இணையச் செய்வதைச் சித்திரிக்கிறது. தனி ஜீவனாக நம்மை அடையாளம் காண்பது மறைந்து உலகியற்கையுடன் தொடங்கும் ஜீவித பந்தமாகத் தொடரப்போகும் நீடித்த பந்தம் அது.
இப்படித்தான் சிறுவன் கணேசன் இந்த உலகின் சின்னஞ்சிறு பூச்சிகள், விலங்குகள் முதல் மனிதர்கள் வரை தேவர்களுக்கும் அசுரர்கள் எல்லாருக்கும் முதல் கடவுளானார். படைப்பின் இயக்கத்தில் இத்தனை உயிர்களும் பங்களிக்கின்றன. அந்த உயிர்கள் அனைத்துக்கும் நன்றி சொல்வதன் பொருட்டே கணபதிக்கு நன்றி சொல்கிறோம். அவரது ஆசிர்வாதத்தைப் பெறுவதன் வாயிலாக நாம் அனைத்துயிர்களின் ஆசிர்வாதங்களைப் பெறுகிறோம்.