கைலாயத்தில் ஒருமுறை பார்வதி தேவிக்கு வேதத்தின் உட்பொருளை சிவபெருமான் உரைத்துக் கொண்டிருந்தார். அப்போது தேவியின் கவனம் சற்று விலகியது. இதைக் கண்ணுற்று சிவபெருமான், தேவியின் பார்வை சென்ற திசையைப் பார்த்தார். அங்கு மயில் ஒன்று தோகை விரித்து ஆடிக் கொண்டிருந்தது.
“தேவி! வேதத்தின் உட்பொருளை கவனிக்காமல், மயிலின் நடனத்தில் உன் கவனம் சென்றது ஏன்?” என்று ஈசன் வினவினார்.
“மயிலினைக் கண்டதும் பாலகன் முருகனின் எண்ணம் வந்தது சுவாமி” என்றாள் அன்னை.
திருவிளையாடல் ஒன்றை நிகழ்த்த ஆசைப்பட்ட இறைவன் “வேதத்தின் உட்பொருளை விட உன் புதல்வனின் எண்ணம் பெரிதா? என்றார்.
“தொண்டர்களின் பெருமை பெரிதல்லவா?” என்று கேட்டாள் அன்னை.
“அப்படியானால் அதனை நீ நிறுவ வேண்டும் தேவி” என்று ஆணையிட்டார் அன்னை.
அதன்படியே பூலோகத்துக்கு வந்த உமையவள் வங்கக் கடலோரம், புன்னை மரங்கள் நிறைந்த சோலைக்குள் மேற்கு நோக்கி சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தாள். பின்னர் மயிலின் வடிவம் எடுத்து அதற்கு தினமும் பூஜைகள் செய்து தவமியற்றினாள். அன்னையின் தவத்தை மெச்சி, சிவபெருமான் அங்கு காட்சி கொடுத்தார். இத்திருத்தலமே சென்னை அருகே இருக்கும் மயிலாப்பூர்.
சிவபெருமானை மயில் வடிவம் கொண்டு அன்னை பூஜித்த வரலாற்றை திருஞான சம்பந்தர்,
“மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்”
என்று தெரிவித்து அருளினார்.
“மயில் பூசிக்க வுற்றவர் கபாலக் கரத்தினர்
கஞ்சம்போன் றாடிய தாளைப் பழிச்சுதும்”
என்று திருமயிலை காப்புச் செய்யுள் கூறுகிறது.
18 புராணங்களில் ஒன்றான பிரம்மாண்ட புராணத்தில் மயூரபுரி, மயூரநகரி, வேதபுரி, சுக்ரபுரி, கபாலீச்வரம் என இந்நகர் அழைக்கப்படுகிறது. ஆதியில் இருந்த கபாலீஸ்வரர் கோயில் கடலில் மூழ்கிவிட்டதாகவும், சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது உள்ள இடத்தில் கோயில் கட்டப்பட்டதாகவும் கூற்று உண்டு.
இத்தலத்தில் வீற்றிருக்கும் அன்னை கற்பகாம்பிகை சிவன் சன்னதிக்கு வலதுபுறம் தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். நெடிதுயர்ந்த நின்ற திருக்கோலம். கருணை நிறைந்த திருக்கண்களுடன், அபய முத்திரை காட்டி அருள்பாலிக்கிறாள்.
ஈசன் வீற்றிருக்கும் கயிலைக்கும், கபாலீசுவரராக அவர் வீற்றிருக்கும் மயிலைக்கும் வித்தியாசம் இல்லை. இரண்டும் ஒன்றே. சென்னை மயிலாப்பூரையும், அதன் அருகிலிருக்கும் மல்லீஸ்வரர், விருபாட்சீஸ்வரர், காரணீஸ்வரர், வாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர் ஆகிய 7 சிவ ஆலயங்களையும் சேர்த்து சப்த சிவஸ்தலங்கள் என்பார்கள். மகா சிவராத்திரி நாளில் இவை ஏழு தலங்களையும் ஒருசேர பக்தர்கள் தரிசிப்பது வழக்கம்.
திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது. இப்படி மயிலாப்பூரையும், அதன் சுற்றியுள்ள பகுதிகளும் சிவமயமாகத் திகழ்வதால்தான், 'மயிலையே கயிலை; கயிலையே மயிலை' என்ற சிறப்பைப் பெற்றது.