திருப்பத்தூர்: சிவகங்கை அருகே பிள்ளையார்பட்டி கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சதுர்த்தி விழா ஆக.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் கேடகத்திலும், மாலையில் சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று வந்தது. செப்.3-ம் தேதி கஜமுக சூரசம்ஹாரம் நடைபெற்றது. தேரோட்டம் நடைபெற்றது. காலையில் பெரியத் தேரில் விநாயகரும், சின்னத் தேரில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளினர்.
தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இது ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் என்பதால் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து 5.30 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். சின்னத் தேரை பெண்கள் இழுத்தனர். தேர்கள் நான்கு வீதிகளின் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். செப்.7ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து தீர்தவாரி உற்சவம், பிற்பகல் 2 மணிக்கு முக்குரணி மோதகம் படையலும் நடைபெறும். இரவு பஞ்சமூர்த்தி புறப்பாடுடன் விழா நிறைவு பெறும்.
» மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா 2ம் நாள்: நாரைக்கு முக்தி அளித்த திருவிளையாடல்