தலையில் தேங்காய் உடைத்து விநோத நேர்த்திக் கடன்

By மு.இசக்கியப்பன்

காவிரிக்கரை காடுகளில் ஆடு மேய்க்கும் குரும்பர் இனத்தவர் முற்காலத்தில் நாடோடிகளாக வாழ்ந்து வந்தனர். ஆட்டுப்பட்டிகளை அமைத்து விலங்குகள் புகாமல் காவலிருப்பது இவர்களது வழக்கம்.

காவிரியாற்றின் கரையில் ஓரிடத்தில் இவர்கள் பட்டி அமைத்திருந்தபோது, ஆடுகளின் மடியில் பால் வற்றிப்போவது வாடிக்கையாக இருந்தது. இதனைக் கவனித்தபோது ஆடுகள் சில மேய்ச்சலில் இருந்து தாமே வழிதவறி குறிப்பிட்ட புற்றுக்கு அருகே செல்வதும், அங்கு அவற்றின் மடியில் இருந்து பால் சொரிவதுமாக இருந்தது. இந்த அதிசயத்தைக் கண்டு, புற்றை சோதித்தபோது அதனுள் மகாலட்சுமி தாயார் அமர்ந்த திருக்கோலத்தில் வீற்றிருந்தாள்.

சுயம்புவாக அம்மன் வெளிப்பட்டது ஆடிப்பெருக்கு நாளாக அமைந்தது. அம்பாளுக்கு மேலே தங்களால் இயன்ற ஓலைக்கூரையை அமைத்து குரும்பர் இனத்தவர் வழிபாடு நடத்திவந்தனர். காவிரியில் வெள்ளப்பெருக்கு சமயங்களில், இக்கோயில் அவ்வப்போது சேதமடைந்தாலும், சுயம்புவாக தோன்றிய அம்மன் விக்ரகத்துக்கு எவ்வித சேதமுமின்றி இருந்தாள். அக்காலம் முதலே ஆண்டுதோறும் ஆடி முதல் நாள் தொடங்கி 18 நாட்களுக்கு விரதமிருந்து, ஆடிப்பெருக்கு நாளன்று அம்மனை காவிரியில் நீராட்டுவதும், ஆடி 19-ம் நாள் பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காயை உடைத்து மகாலட்சுமி தாயாரை வழிபடுவதும் வழக்கம். இதுவே மேட்டுமகாதானபுரம் மகாலட்சுமி கோயில்.

மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி கோயில்

கரூரில் இருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ளது மகாதானபுரம். இங்கிருந்து தெற்கே அமைந்துள்ளது மேட்டுமகாதானபுரம். இக்கோயிலில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தலையில் தேங்காய் உடைத்துக் கொள்வதற்காக நேர்ந்து கொண்ட பக்தர்கள் ஆடி 1-ம் தேதி முதல் காப்புக் கட்டி விரதம் இருப்பார்கள். ஆடிப்பெருக்குக்கு முதல் நாள், காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இரவு சக்தி அழைப்பு, ஆடிப்பெருக்கு அன்று அம்மன் தீர்த்தவாரிக்கு காவிரிக்கு செல்லும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும். ஆடி 18 அன்று இரவு மகாதானபுரம் காவிரி ஆற்றில் பூசாரி கத்தி வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

ஆடி 19 அன்று காலை மகாலட்சுமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பரிவார தெய்வங்களுடன் திருவீதி உலா கண்டு கோயிலை வந்தடைவார். அப்போது நேர்த்திக்கடன் செலுத்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயில் வாசலில் வரிசையாக தரையில் அமர்ந்திருப்பார்கள். இவர்களில் பலரும் முடிக் காணிக்கை செலுத்திவிட்டு தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

நேர்த்திக்கடனாக தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி...

கோயில் பூசாரி ஆணிகளாலான பாதக்குரடு அணிந்தபடி அவர்களது தலையில் தேங்காய் உடைப்பார். தலையில் தேங்காய் உடைக்கும் போது பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்றும், ‘மகாலட்சுமி தாயே’ என்றும் கோஷம் எழுப்புவார்கள். தங்கள் தலையில் உடைத்த தேங்காய்களை பக்தர்கள் மற்றும் விழாவில் பங்கேற்றவர்கள் சேகரித்து எடுத்துச் செல்வார்கள்.

சென்னை, கோவை, திருப்பூர், சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு தலையில் தேங்காய் உடைத்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றுவர்.

கரூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல் போன்ற நகரங்களில் இருந்து மேட்டு மகாதானபுரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

3.8.2023 - காவிரிக்கு அம்மன் எழுந்தருளல்.

4.8.2023 - தேங்காய் உடைக்கும் நிகழ்வு.

மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி கோயில்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE