கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே தட்சிண கன்னட மாவட்டத்தில் கடபா (சுல்லியா) தாலுக்கா, குக்கே சுப்ரமண்யா கிராமத்தில் அமைந்துள்ள முருகப்பெருமானின் கோயில் புகழ்பெற்ற நாகர் கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இக்கோயிலில் கார்த்திகேய சுவாமி, அனைத்து நாகங்களுக்கும் அதிபதியாக விளங்கும் சுப்பிரமணிய சுவாமியாக போற்றப்படுகிறார்.
கருடாழ்வாரால் அச்சுறுத்தப்பட்டபோது வாசுகி உள்ளிட்ட பாம்புகள் சுப்பிரமணிய சுவாமியிடம் தஞ்சம் அடைந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இத்தலத்தில் முருகப் பெருமான் நாகர்களின் தலைவனாக, தன் தலை மீது ஐந்து நாகர்களுடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தல முருகப்பெருமானை, நாகர்கள் தங்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர்.
ஆதிசங்கரர், மத்வாச்சாரியார் இத்தலத்துக்கு வந்து வழிபாடு செய்துள்ளதால், இக்கோயில் பல யுகம் கண்ட கோயிலாகப் போற்றப்படுகிறது. கடந்த 700 ஆண்டுகளாக மத்வாச்சாரியாரின் ‘தந்திர சார சங்கிரஹா’ என்ற வழிபாட்டு முறைப்படி இங்கே தினசரி பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்யப்படுகின்றன.
தல வரலாறு
காஷ்ய முனிவரின் மனைவிகள் கத்ரு, வினதா ஆகியோருக்கு இடையே அவ்வப்போது வாக்குவாதம் எழுவது வழக்கம். ஒருசமயம், குதிரைகள் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டு, அவரவர் கூறுவதே சரி என்று இருவரும் வாதிட்டனர். யாருடைய கருத்து சரியானதோ, அவருக்கு, தோல்வி அடைந்தவர் அடிமைப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த வாக்குவாதத்தில் கத்ரு தோல்வி அடைந்தார். முன்னர் ஒப்புக்கொண்டபடி கத்ருவும் அவரது குழந்தைகளான நாகர்களும், வெற்றி பெற்ற வினதாவுக்கு அடிமைகளாக கருதப்பட்டனர். இதை சாதகமாகப் பயன்படுத்தி வினதாவின் குழந்தை கருடன், நாகர்களுக்கு (நாகங்கள்) இன்னல்கள் அளிப்பது தொடர்கதையானது.
செய்வதறியாது தவித்த நாகங்கள், வாசுகி பாம்பின் தலைமையில் குமாரதாரா என்ற நதிக்கு அருகில் இருந்த குகையில் தங்க முடிவெடுத்தன. அதன்படி அங்கு வந்து சிவபெருமானை நோக்கி தவம் புரிந்தன. தங்களை கருடனிடம் இருந்து காக்குமாறு வேண்டின.
மனம் இரங்கிய சிவபெருமான், நாகங்கள் முன்பாக தோன்றி, தனது மகன் சுப்பிரமணியனிடம் அவர்களது குறைகளைக் கூறுமாறு பணித்தார். அதன்படி அனைத்து பாம்புகளும், குமாரதாரா நதியில் நீராடி, சுப்பிரமணியரை வழிபட்டன. இதில் மகிழ்ந்த சுப்பிரமணியர், நாகங்களைக் காத்தருளினார். முருகப்பெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாக வாசுகி பாம்பு, தனது ஐந்து தலைகளையும் விரித்து சுப்பிரமணியருக்கு குடையானது.
இதையடுத்து, கர்நாடகத்தில் ஓடும் குமாரதாரா நதியின் கரையில் சுப்பிரமணியருக்கு கோயில் எழுப்பப்பட்டது. மேலும், ஊரின் பெயரே ‘சுப்ரமண்யா’ என்றானது. முருகப்பெருமான் சேவலை கொடியாக வைத்துள்ளதால், ‘குக்குட த்வஜ கந்தசுவாமி’ என்று அழைக்கப்படுகிறார். (குக்குடம் - சேவல். த்வஜ – கொடி). இக்கோயிலுக்கு அருகில் உள்ள பள்ளூஸ் குகையில் சிவபெருமானும், பார்வதி தேவியும் அருள்பாலிக்கின்றனர்.
கோயில் அமைப்பும் சிறப்பும்
தமிழகத்தில் பழநி உள்ளிட்ட கோயில்கள் முருகப்பெருமானின் புகழுரைப்பது போல, கர்நாடக மாநிலத்தில் ‘குக்கி (குக்கே) சுப்ரமண்யா’ உள்ளிட்ட கோயில்கள் முருகப்பெருமானின் அருட்குணங்களை பறைசாற்றுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குமார மலைப் பகுதியில் அமைந்துள்ள இம்மலை, இயற்கைக் காட்சிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த குமார மலையைப் பாதுகாக்கும் விதமாக இதன் அருகே ஆறு தலை பாம்பு வடிவத்தில் சேஷ மலை அமைந்துள்ளது. மலையேறுபவர்களுக்கு சிறந்த மலையேற்ற இடமாக குமார பர்வதம் அமைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் எப்போதும் திரளாக இங்கு வருகின்றனர்.
தாரகாசுரன், சூரபத்மன் உள்ளிட்ட அரக்கர்களை அழித்த முருகப்பெருமான், விநாயகப் பெருமானுடன் இத்தலத்துக்கு (குமார மலை) வந்துள்ளார். இந்திரன் முதலான தேவர்கள், வெற்றிக் களிப்புடன் வந்த முருகப் பெருமானையும் விநாயகப்பெருமானையும் வரவேற்றனர். தனது மகள் தெய்வயானையை, முருகப்பெருமானுக்கு மணம் முடிக்க எண்ணிய இந்திரன், இதுகுறித்து முருகப்பெருமானின் சம்மதத்தை கேட்டார். முருகப்பெருமானும் இந்திரனின் எண்ணத்தை ஈடேற்ற தெய்வயானையை மணம் புரிந்தார். சுப்ரமணியருக்கும் தெய்வயானைக்கு குமார மலையில் திருமணம் நடந்தேறியது. சிவபெருமான், பிரம்மதேவன், திருமால், தேவர்கள் அனைவரும் முருகப்பெருமனையும் தெய்வயானையையும் வாழ்த்தினர். அன்று முதல் தெய்வயானையுடன் முருகப்பெருமான் இத்தலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
தாரகாசுரனை அழித்த முருகப்பெருமான், தனது வேலில் படிந்த குருதியைக் களைய, குமாரதாரா நதிக்கு வந்தார் என்று புராணங்கள் உரைக்கின்றன. பரசுராமரும் தன் தாயைக் கொன்ற பாவம் நீங்க குமாரதாரா நதியில் நீராடியுள்ளார்.
பக்தர்கள் கோயிலுக்குச் செல்வதற்கு முன், குமாரதாரா நதியில் நீராடிவிட்டுச் செல்ல வேண்டும். பின்புறம் உள்ள வாசல் வழியாக முற்றத்துக்குள் நுழைந்து குக்கே சுப்பிரமணிய சுவாமியை வணங்க வேண்டும். கோயில் முன் மண்டபத்துக்கும் கருவறைக்கும் நடுவே உள்ள வெள்ளித் தூணை வலம் வந்து, அதில் பொதிந்துள்ள கருடாழ்வாரை வழிபட்டால் பாம்புகள் உமிழும் விஷத்தையும் எதிர்கொள்ளும் வல்லமை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தூணுக்கு அப்பால் வெளி மண்டபம், உள் மண்டபம், சுப்பிரமணியர் உறையும் கருவறை உள்ளது. கருவறையின் மையப் பகுதியில் உள்ள பீடத்தின் மேல் மேடையில் சுப்பிரமணிய சுவாமி வீற்றிருக்கிறார். அருகே, வாசுகி பாம்பு, சற்றே கீழ் நிலையில் சேஷ தெய்வம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மூவருக்கும் ஒவ்வொரு நாளும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுவது வழக்கம்.
குக்கே பட்டணன் என்று அழைக்கப்படும் முருகப் பெருமான் உறையும் இத்தலத்தைப் பற்றி கந்தபுராணம் சனத்குமார சம்ஹிதை (சஹ்யாத்ரி காண்டத்தின் மஹிமணி புராணம்) விரிவாக எடுத்துரைக்கிறது.
சம்ஸ்கிருதத்தில் இத்தலம் ‘குக்ஷி’ என்று அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் பேச்சுவழக்கில் இப்பெயர் ‘குக்கி’ என்று திரிந்து, பின்னர் ‘குக்கி சுப்பிரமண்யா’ என்றானது. இத்தலத்தைச் சுற்றி 113 சிவத்தலங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலில் தினமும் 9 கால பூஜைகள் நடைபெறுகின்றன.
நாக தோஷ பரிகார ஸ்தலம் என்று அழைக்கப்படும் இத்தலத்தில், காலையில் கோ பூஜை, மதியம் உச்சி கால பூஜை, மாலையில் சாயரட்சை பூஜை ஆகியவை சிறப்பாக நடைபெறுகின்றன. கால பைரவர் சந்நிதியிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
டிசம்பர் மாதத்தில் இக்கோயில் மூலவருக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்கள், வாழை இலைகளில் விருந்து உண்ட பின்னர், அந்த இலைகளை வரிசையாகப் பரப்பி அதன் மேல் பக்தர்கள் அங்கப்பிரதட்சிணம் செய்தால் நன்மை கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.
டிசம்பர் மாதத்தில் நடைபெறும் சர்ப்ப சம்ஹார பூஜை (நாக தோஷ நிவர்த்தி) பரிகார பூஜையாகும். ஒவ்வொரு மாதமும் அஸ்லேஷா (ஆயில்யம்) நட்சத்திர நாளில் நடைபெறும் பரிகார பூஜைக்கு (அஸ்லேஷா பலி) கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இருப்பினும் புரட்டாசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் நடைபெறும் அஸ்லேஷ பலி பரிகார பூஜை செய்வதற்கு உகந்த மாதங்களாக கூறப்படுகிறது. அஸ்லேஷ பலி சடங்குகள் மற்றும் சர்ப்ப சம்ஸ்கார பூஜைகளில் எண்ணற்ற பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்கின்றனர். சர்ப்ப சம்ஹார பூஜை இரண்டு நாட்கள் நடைபெறும். இதில் இறுதிச் சடங்குகள் போன்ற சடங்குகளும் அடங்கும். முதல்நாள் சர்ப்ப விக்கிரகம், கோதுமை மாவில் செய்யப்பட்ட இரண்டு பாம்புகள், கலச தீர்த்தம் வைத்து பூஜை செய்யப்படுகிறது. இரண்டாம் நாள் கங்கா பூஜை செய்து, நாகர் சிலைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து பால் ஊற்றி வழிபாடு செய்யப்படுகிறது.
குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு அருகேயே ஆதி சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. வால்மீகா என்றழைக்கப்படும் புற்று இந்தக் கோயிலின் கருவறையில் காணப்படுகிறது. மிகப் புராதனமான இந்த புற்று வடிவங்கள் ஆதிசேஷன் மற்றும் வாசுகி என்று வணங்கப்படுகின்றன.
திருவிழாக்கள்
வைகாசி விசாகம், நவராத்திரி, திருக்கார்த்திகை, கந்த சஷ்டி, தைப்பூசம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் உள்ளிட்ட உற்சவங்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
வாசுகி உள்ளிட்ட நாகங்களுக்கு முருகப் பெருமான், அபயம் அளித்துள்ளதால், ராகு - கேது தோஷத்தால் அவதிப்படுபவர்கள் இத்தலத்தில் உள்ள குமாரதாரா தீர்த்தத்தில் நீராடி வழிபாடு செய்கின்றனர். கொலை உள்ளிட்ட தீய செயல்களில் ஈடுபட்டு பிரம்மஹத்தி தோஷத்தால் அவதிப்படுபவர்கள், முன் ஜென்ம பாவங்களால் சிரமப்படுபவர்கள் ஆகியோருக்கு இத்தலம் பித்ரு கடன் நிவர்த்தி தலமாக விளங்குகிறது.
வயிற்று வலி, தோல் நோய், மன நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இத்தலத்துக்கு வந்து வழிபாடு செய்கின்றனர். கால சர்ப்ப தோஷம் நீங்க, குழந்தை பாக்கியம் பெற, திருமணத் தடை நீங்க, வேலைவாய்ப்பு பெற இத்தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
இத்தலத்தில், செய்த ஸ்னானா, பீடி மடேஸ்னானா, நாக பிரதிஷ்டை, உருளுசேவா, கார்த்திகா, மகா பூஜை, பஞ்சாமிர்த அபிஷேகம் உள்ளிட்ட சேவைகளைச் செய்து பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.
கோயில் அமைவிடம்: பெங்களூரு - மங்களூரு ரயில் தடத்தில் அமைந்துள்ள சுப்ரமண்யா ரோடு ரயில் நிலையத்தில் இருந்து 15 நிமிட பயணத்தில் சுப்ரமண்யா என்ற கிராமத்தின் நடுவே குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. மங்களூருவில் இருந்து 105 கி.மீ தொலைவிலும், பெங்களூருவில் இருந்து 317 கி.மீ தொலைவிலும் இத்தலம் உள்ளது.