ஆட்சியில் இருந்தவர் ஆச்சார்யனாக மிளிர்ந்தார்

By மு.இசக்கியப்பன்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் 8-ம் நூற்றாண்டில் அவதரித்தவர் சுவாமி நாதமுனிகள். நாலாயிர திவ்ய பிரபந்தம் நமக்கு மறுபடியும் கிடைக்கச் செய்தவர். இவரது புதல்வர் ஈசுவரமுனி. ஈசுவரமுனிக்கு திருப்புதல்வராக அவதரித்தார் ஆளவந்தார். ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் காட்டுமன்னார்கோவிலில் ஆளவந்தார் அவதரித்தார்.

இவரது இயற்பெயர் யமுனைத்துறைவர். இளம்வயதிலேயே கல்வி கேள்விகளில் வல்லவராக இருந்தார். அவரது அறிவாற்றலைக் கண்டு வியந்து, அந்நாட்டின் ராஜா தனது ராஜ்யத்தில் பாதியை ஆளவந்தாருக்கே கொடுத்தார். தமக்கு பரிசாக கிடைத்த நாட்டுக்கு ஆளவந்தார் ராஜாவாக இருந்தார்.

ஸ்ரீரங்கநாத பெருமாள்

அவருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்து, ரஹஸ்ய அர்த்தங்களை விளக்கி, வைணவ ஆசார்யராக்கினார் சுவாமி மணக்கால் நம்பி. பின்னர் திருவரங்கத்துக்கு அவரை அழைத்து வந்து, சயனக் கோலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீரங்கநாத பெருமாளைக் காண்பித்து, “யமுனைத்துறைவரே.. ஆளவந்தாரே... உமது மூதாதையர் சேர்த்து வைத்த சொத்து இதோ இவர்தான்” என்றார். திருவரங்கநாதனின் திருவடி தொடங்கி, திருமுடி வரை பார்த்தார். எப்படி முதன்முதலாக திருப்பாணாழ்வார் பார்த்தாரோ, அதேபோல, இவரும் வைத்தகண் வாங்காமல், மனமும், செயலும், சிந்தையும் மறந்து பெரியபெருமாளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆசனபத்மத்தில் அழுத்தின திருவடியும், வைத்து அஞ்சேல் என்ற திருக்கரமும், கவித்த முடியும், முகமும், முறுவலும், தஞ்சமாகவே இருக்கக்கூடிய உற்சவர் சுவாமி நம்பெருமாளின் திருமேனி அழகைப் பார்த்தார். அடுத்த நிமிடமே பெருமாளுக்கு மீளா அடிமையானார். ‘பழுதே பலபகலும் போயின - ஊமையார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழிந்தன நாட்கள்’ என்று வேதனைப்பட்டார். இத்தனை நாட்களும் அறியாமல் இருந்துவிட்டேனே என்று துடித்தார். அதன்பிறகு ஸ்ரீரங்கத்தைவிட்டு ஆளவந்தார் எங்குமே அகலவில்லை. அவரைத் தேடி சீடர்கள் பலர் வந்தார்கள். அத்தனை பேரும் வித்வான்களாக மிளிர்ந்தார்கள்.

ஆளவந்தார்

பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருவரங்கத்து பெருமாள் அரையர், திருமாலையாண்டான், திருக்கச்சி நம்பி, மாறநேர் நம்பி என எல்லோருமே மகான்கள், ஞானிகள். ஸ்ரீரங்கத்தில் ஆளவந்தார் காலத்தில் வைணவம் தழைத்தோங்கியது. சுவாமி ஆளவந்தாரால் காஞ்சிபுரத்தில் அடையாளம் காணப்பட்டு, அவருக்கு அடுத்த ஆசார்யராக ஸ்ரீ பகவத் ராமானுஜர் நியமிக்கப்பட்டார். சுவாமி ஆளவந்தாரின் அவதார நாளான ஆடி உத்திராடம் நன்னாள் ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி, ஆழ்வார்திருநகரி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட தலங்களில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

VIEW COMMENTS