திருவண்ணாமலையில் தீபத்திருவிழா; கொடியேற்றத்துடன் தொடங்கியது: பக்தர்கள் பரவசம்!

By காமதேனு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இங்கு கார்த்திகை மாத தீபத்திருவிழா இன்று அதிகாலை 2 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகளான விநாயகர், முருகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கோயில் கொடிமரம் முன்பு ஒன்றன் பின் ஒன்றாக பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளியவுடன் அண்ணாமலையார் சன்னிதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்கக் கொடிமரத்தில் அண்ணாமலையாருக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.

கொடியேற்றம்

10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவில் காலை, மாலை என இரண்டு வேளையும் சாமி வீதி உலா நடைபெறும். இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக நவம்பர் 22-ம் தேதி இரவு வெள்ளி ரதத்தில் மாட வீதியில் பவனி வந்து பஞ்சமூர்த்திகள் அருள் புரிவார்கள்.

நவம்பர் 23-ம் தேதி மகா தேரோட்டம் நடைபெறும். நிறைவு நாளான நவம்பர் 26-ம் தேதி திருக்கோயில் கருவறையின் முன்பு அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு திருக்கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும். இன்று நடைபெற்ற கொடியேற்ற விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE