பட்டத்து யானையால் வெளிவந்த சிவலிங்கம்!

By மு.இசக்கியப்பன்

திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகேயுள்ள உக்கிரன்கோட்டையை 11-ம் நூற்றாண்டில் உக்கிரபாண்டியன் என்னும் அரசன் ஆண்டு வந்தார். தென்பாண்டி நாட்டில் ஏராளமான திருப்பணிகளை மேற்கொண்டவர் இவர். இவரது தலைநகராக விளங்கிய உக்கிரன்கோட்டை இப்போது கிராமமாக உள்ளது. இவர் வாழ்ந்த கோட்டை அரண்மனை மணற்குன்றாக இருப்பதை இப்போதும் காணலாம்.

ஒருமுறை மதுரை சோமசுந்தர பெருமானையும், மீனாட்சி அம்பாளையும் தரிசிக்க யானை மீது அமர்ந்து மதுரை நோக்கி பயணித்தார் மன்னன். குறிப்பிட்ட ஓரிடத்தில் பட்டத்து யானை குனிந்து தனது கொம்பினால் மண்ணைக் குத்தியது. இதனால், யானை மீதிருந்து மன்னர் நிலைசரிந்து கீழே மண்ணில் விழுந்தார். யானை பிளிறியபடி அங்கிருந்து நகர மறுத்தது.

புற்றுக்குள் அதிசயம்

அச்சமயம் புன்னைமரங்கள் நிறைந்த காட்டினை காவல்செய்து வந்த காவல்காரன் மணிக்கிரீவன் என்பவன், “அரசே இங்கு புன்னைவனம் ஒன்று உள்ளது. அதில் புற்று ஒன்றும் உள்ளது. ஒருமுறை அந்தப் புற்றினை வெட்ட பாம்பு ஒன்று வால் அறுந்த நிலையில் தோன்றியது. அதன் வலிமை எவருக்கும் தெரியாது. அந்தப் புற்றுக்குள் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. அதனை அந்தப்பாம்பு காவல் காத்து வருவதாகத் தெரிகிறது” என தெரிவித்தான்.

யானை தனது தந்தத்தால் மண்ணைக் குத்தியதையும், அங்கிருந்து நகர மறுப்பதையும், மணிக்கிரீவன் கூறிய வரலாற்றையும் கேட்ட மன்னன் இங்கு ஏதோ அதிசயம் இருக்கிறது என்று உணர்ந்தான். தனது படைவீரர்களுடன் புன்னைவனச் சோலையை அடைந்தான். வீரர்கள் அந்தப் புற்றினை விலக்க அதனுள் சிவலிங்கம் இருப்பதைக் கண்டு அனைவரும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தனர்.

உடனே புன்னைவனச் சோலையைத் திருத்தி, கோயிலும், மதில்களும் கட்டி, கோயிலில் பணிசெய்ய அந்தணர் குடும்பங்களையும் நியமித்தார் உக்கிரபாண்டியன். இதுதான் சங்கரன்கோவில் நகரம். உக்கிரபாண்டியனுக்குப் பின்னர் பல்வேறு மன்னர்கள் இக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்தனர்.

மன்னர் உக்கிரபாண்டியன் மற்றும் மணிக்கிரீவர் சிற்பங்கள்

மணிக்கிரீவன் சன்னதி

சங்கரநாராயண சுவாமி கோயிலைக் கட்டுவதற்கு முதல் காரணமாக இருந்தவர் மணிக்கிரீவன். புன்னைவனத்தில் உள்ள புற்றையும், அதற்குள் சிவலிங்கம் கோயில் கொண்டிருப்பதையும் உக்கிரபாண்டிய மன்னனுக்கு அறிவித்தவர் இவரே.

கோயிலில் கோபுரத்தைத் தாண்டியதும், அறநிலையத்துறை நிர்வாக அலுவலகத்தின் இடப்புறத் தூணில் மணிக்கிரீவனின் திருவுருவத்தை இப்போதும் காணலாம். இதுதவிர சங்கரன்கோவிலுக்கு தெற்கே இவருக்கு தனியாக ஒரு சிறு கோயில் இருக்கிறது. அங்கு நித்திய பூஜைகள் நடைபெறுகின்றன. சங்கரநாராயண சுவாமி கோயிலின் சித்திரை விழா தொடங்குவதற்கு முன்பாக, மணிக்கிரீவனுக்கு சிறப்பு வழிபாடு நடத்திய பின்னரே கோயிலில் கொடி ஏற்றம் நிகழ்கிறது.

மன்னன் உக்கிரபாண்டியன்

இதுபோல், சங்கரலிங்கப் பெருமான் சன்னதிக்கு செல்லும்போது கொடிமரத்தை தாண்டியவுடன் உள்ள இரு தூண்களில் மன்னன் உக்கிரபாண்டியனையும், உமாபதி சிவாச்சாரியாரையும் காணலாம்.

உக்கிரபாண்டியனின் யானை தனது பெரிய தந்தத்தினால் குத்திய இடம் பெருங்கோட்டூர் என்று பெயர் பெற்றது.

பிடிமண் எடுத்தல்

சங்கரநாராயணருக்கு சித்திரை மாதம் திருவிழா எடுத்த மன்னர் உக்கிரபாண்டியர், தாம் இறைவனைக் காணக் காரணமாயிருந்த பெருங்கோட்டூரில் இருந்து, யானை மூலம் பிடி மண் எடுத்து வந்து, அதன்பிறகே திருவிழாவை நடத்தி மகிழ்ந்தார். அந்த வழக்கம் இப்போதும் பின்பற்றப்படுகிறது. கோயில் யானை பெருங்கோட்டூருக்கு சென்று, தனது தும்பிக்கையால் மண்ணை எடுத்து சிவாச்சாரியாரிடம் கொடுக்கும். அந்தப் பிடிமண்ணை எடுத்து வந்து கோயில் கொடிப்பட்டம் ஏறுவது இப்போதும் பின்பற்றப்படுகிறது.

ஆடித்தபசு தரிசனம் - 2...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE